domenica 3 gennaio 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு நாளை வெளியாகும்?

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு நாளை வெளியாகும்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை தமது முடிவை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரண்டு வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழ்தேசியக்கூட்டமைப்பு சமர்ப்பித்த 8 அம்சக்கோரிக்கைக்கு சரத் பொன்சேகாவின் தரப்பு, சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மஹிந்த ராஜபக்சவின் தரப்பு, உரிய பதிலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

(1)தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கவேண்டும்

(2) தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் தமிழீழ விடுதலைப்புலிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும்

(3) யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படவேண்டும்

(4) வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்

(5) இடம்பெயர்ந்தோர் துரிதமாக மீள்குடியேற்றப்படவேண்டும்.

(6) மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்

(7) வடக்கு கிழக்கில் அழிவுக்குள்ளான வீடுகளை கட்டித்தரவேண்டும்

(8) வடக்குகிழக்கு குடியேற்றத்திட்டங்களை நிறுத்தவேண்டும்

என்பனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளடங்கிய குழுவினர், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எந்த ஒரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். இதன் அடிப்படையிலேயே அண்மையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணத்தில் வைத்து தேர்தலை பகிஸ்கரிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் என் ஸ்ரீகாந்தா, ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறார்

இந்தநிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை தமது முடிவை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Nessun commento:

Posta un commento