domenica 24 gennaio 2010

அடுத்த ஜனாதிபதி யார்? - வீரகேசரி

mahinda-sarath-004-150x150 அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து 22 பேர் வேட்பாளர்களாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரையான காலப் பகுதி வரைக்குள் சுமார் 950 க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுக்குமே முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை தவிர முறையிடப் படாத பல தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையும் சுதந்திரமான அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வன்முறைச் சம்பவங்களின்போது பிரதான இரு வேட்பாளர்களதும் ஆதரவாளர்களென நம்பப்படும் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான முறைப்பாடுகள் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தரப்பிலிருந்தே செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆளும் தரப்பினருக்கு எதிரான முறைப்பாடுகளே கூடுதலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிகரித்துக் காணப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச, உள் ளூர் அமைப்புகளும் தமது கவலையை வெளியிட்டிருந்தன.நீதியும் நேர்மையும் மிக்க தேர்தலுக்கு இந்த வன்முறையானது ஒரு சவாலாக அமையலாமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு தினத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் ஈடுபடுத்துவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேர்தல் பணிகளைக் கணக்காணிக்கவென ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய செயலக உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 28 ஆம் திகதி இவர்கள் தேர்தல் தொடர்பான இறுதியறிக்கையைக் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில் நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்டவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது கால ஜனாதிபதி ஆட்சிக்கான மக்கள் ஆணைகோரி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு பிரதான சிங்களக் கட்சிகள் பலவும் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு வழங்கியுள்ளன. தனது தேர்தல் விஞ்ஞாபனமாக 14 அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
இவருக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் நாற்பது வருடகால சேவை புரிந்தவர். இவருக்கும் சிங்களக் கட்சிகள் பலவும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவரும் பத்து அம்சங்கள் கொண்ட தனது திட்டத்தை மக்கள் முன்வைத்துள்ளார். இந்த இரு பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய 20 பேரில் ஒரு தமிழரும் இரு முஸ்லிம்களும் அடங்குவர்.
வாக்களிப்பு மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மறு வாக்களிப்புக்கு உத்தரவிடப்படுவதுடன் முடிவு அறிவிப்பதிலும் தாமதம் ஏற்படலாமெனக் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் 27 ஆம் திகதி காலையே வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திரு கோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்

Nessun commento:

Posta un commento