martedì 5 gennaio 2010

முக்கிய செய்திகள்....05/01/2010

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதே சொத்துக்களை
அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவே புலிகளுக்கு சொந்தமான ஒரு தொகுதி சர்வதேச சொத்துக்களை இனம் கண்டு, பட்டியல்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய சொத்துக்களை அடையாளம் கண்டு பட்டியல் படுத்தும் பணிகளையும் புலனாய்வுப் பிரிவினர் தீவிரப்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மற்றும் கப்பல் ஒன்றை மீட்டமை மிகப் பெரிய சாதனைகளாகும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்கென்டினேவிய நாடுகள், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டும் நடடிக்கைகள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில நாடுகளில், புலிகளுக்கு பணம் வழங்கிய நன்கொடையாளர்கள் பணத்தை மீளளிக்குமாறு நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை அரசுடமையாக்கும் பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் அரசாங்க அதிகாரிகள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை முதலீட்டு சபை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக முதலீட்டு சபையின் முதலீட்டு மற்றும் ஊக்குவிப்புக்கான பிரதி பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகரவின் தலைமையிலான குழு வட பகுதியில் முதலீட்டு வாய்ப்புக்களில் ஈடுபட விரும்பும் வர்த்தக சமூகத்தினரை இன்று 5 ஆம் திகதியும் நாளை 6 ஆம் திகதியும் சந்தித்து பேசுகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ சிட்டி ஹோட்டலில் இந்த வர்த்தக சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. இதேவேளை மேற்படி முதலீட்டு சபை குழு யாழ். பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நாளை 6 ஆம் திகதியும் நாளை மறு நாள் 7 ஆம் திகதியும், யுத்தத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முதலாவது வர்த்தக ரீதியிலான கருத்தமர்வு ஒன்றிலும் கலந்து கொள்கிறது.
வட மாகாணத்தில் வர்த்தக வாய்ப்புகளில் ஈடுபட விரும்பும் வர்த்தகர்கள் யாழ். டில்கோ சிட்டி ஹோட்டலில் முதலீட்டு சபையின் தூதுக்குழுவை நேரடியாக சந்தித்து பேசலாம். அல்லது யாழ். பொது நூலகத்தில் இடம்பெறும் கருத்தமர்வில் கலந்து கொண்டு தமது வர்த்தக வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் முதலீட்டு சபை தனது கிளையொன்றை திறக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது

இம்மாதம் 15 ஆம் திகதி சூரியகிரகணம் தோன்றவுள்ளது என ஆதர் ஸீ க்ளார்க் கேந்திர நிலையம் அறிவித்துள்ளது.
இந்த சூரியகிரகணத்தை வட பகுதியில் முழுமையாகவும் அநுராதபுரத்தின் தென்பகுதியில் பகுதி அளவிலும் பார்வையிடலாம் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு பார்க்கின்றவர்கள் பாதுகாப்பான கண்ணாடி ஊடாகவே பார்க்க வேண்டும் என நிலையம் கேட்டுள்ளது.
அவ்வாறில்லாமல் நேரடியாகப்பார்த்தால் கண்கள் பாதிப்புக்குள்ளாகி பார்வையை இழக்கவும் நேரிடலாம் என அந்த நிலையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது

கடந்த நான்கு வருட காலத்தில் இலங்கையரின் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்துள்ளேன். இவ்வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்கு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மருத்துவ மாதுகள் இந்த நாட்டுக்கு சிறந்த சேவை செய்து வருகின்றார்கள். அவர்கள் வீடு, வீடாகச் சென்று தங்களது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். இவர்களது சேவையின் பயனாக இந்நாட்டில் தாய் - சேய் மரணம் பெரிதும் குறைந்துள்ளது. இதனையிட்டு அவர்களை நான் கௌரவப்படுத்துகின்றேன்.
நான் 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது.
ஆயினும் 2005 ஆம் ஆண்டு முதல் பின்வந்த நான்கு வருடங்களிலும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் தனிநபர் வருமானம் இவ்வாறான அதிகரிப்பைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
இருந்தபோதிலும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்காகும். இதற்குத் தேவையான சகல வேலைத்திட்டங்களும் இங்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டு மக்களுக்கு வளமான சுபீட்ச வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனை எனது கடமையாகவும், பொறுப்பாகவும் கருதுகிறேன். என்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல, டாக்டர் ராஜித சேனாரட்ன, எம். பி. விமல் வீரவன்ச உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்

இதுவரை காலமும் பேணப்பட்டு வந்த வெளிநாட்டு வங்கிக் கொடுக்கல் வாங்கல் சட்ட விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கைப் பிரஜைகள் உலகின் எந்தவொரு நாட்டு வங்கியுடனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பணத்தை வைப்பிலிடல், மீளப் பெற்றுக் கொள்ளல், முதலீடு செய்தல், குறுகிய நீண்டகால பிணைப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு சொத்தக்களின் கையிருப்பு ஆகியவற்றின் காரணமாக சட்ட விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வியாபார நோக்கத்திற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகள் இலங்கை ரூபாவில் வங்கிக் கணக்குகளை பேண முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிறைச்சாலையில் விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கும் வேறும் கைதிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விடுதலைப் புலி சந்தேக நபர்கள் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர்கள் வேறும் சிறை அறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக நேற்றைய தினம்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்து பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது.
கிளிநொச்சி ஹிந்து கல்லூரி, புனித பற்றிமா ரோமன் கத்தோலிக்க கல்லூரி, கனகபுரம் மஹாவித்தியாலயம், ஹிந்து ஜூனியர் பாடசாலை மற்றும் புனித திரேஷா ஆகிய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பாடசாலை திறப்பு நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 350 ஆசிரியர்கள் சமூகமளித்ததாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பாடசாலை சீருடைகள், புத்தகங்கள் உள்ளிட்ட சகல பாடசாலை உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

11 இலங்கை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை இந்தோனேஷிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷியாவின் கெப்புலான ரியாவு மாநிலத்தில் வைத்து குறித்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிராவா கார்டன் என்ற கரையோர விடுதி ஒன்றில் மறைந்திருந்த போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஏழு ஆண்களும், இரண்டு பெண்களும், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அனைவரும் தலா 100 அமெரிக்க டொலர்கள் செலுத்தி மலேசியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் உரிய சலுகைகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் தாம் இந்தோனேஷியாவில் சரணாகதியடைய தீர்மானித்ததாக சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சகல தொழிலாளர்களுக்கும் நான்கு மணித்தியால விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.
சகல பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய நான்கு மணித்தியால விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
1981ம் ஆண்டு ஜனாதிபதித் தெரிவு தொடர்பான 110 ஆவது சரத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளா தயானந்த திஸாநாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த சட்டத்தை மீறும் தொழில் கொள்வோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குதல் செய்யப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சட்டத்தை மீறிச் செயற்படும் தொழில் கொள்வோருக்கு அதிக பட்சமாக 500 ரூபா அபராதமோ அல்லது ஒரு மாதத்திற்கு கூடாத சிறைத்தண்டனையோ வழங்க சட்டத்தில் சந்தர்ப்பம் உள்ளது.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோருவதற்கு சகல தொழிலாளர்களுக்கும் உரிமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்களிப்பு நிலையத்திற்கும் தொழில் செய்யும் நிறுவனத்திற்கும் இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரனின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு கருப்பையா கனகரட்னம் என்பவரை நியமிப்பதற்கு கட்சி தீர்மானித்துள்தளாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பெ. சந்திரசேகரனின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கடந்த 2004ம் ஆண்டில் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கருப்பையா கனகரட்னத்தை நியமிப்பதென கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
கடந்தத் தேர்தலில் முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் அருள்சாமியும் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அருள்சாமி தற்போது வேறொரு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதனை வழிநடத்தி வருகின்ற காரணத்தினால் அவரை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது என மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் கருப்பையாக கனகரட்னம் முன்னணி வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, அமரர் சந்திரசேகரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக கருப்பையா கனரட்னம் நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அமரர் சந்திரசேகரனின் பாரியாரான சாந்திதேவி சந்திரசேகரனை மத்திய செயற்குழு ஏகமனதாகத் தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆறு பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் சுயாதீனமான முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் குறித்த குழுவினருக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தினத்தன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, அவ்வாறாயின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினமான எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 8.30 மணிமுதல் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிக்கக் கூடியதாக இருக்கும். 26 ஆம் திகதி வாக்களிப்புகள் அனைத்தையும் அன்றைய தினம் 8.00 மணிமுதல் கணக்கெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது. அடைமழை பெய்யுமாயின் ஆகாய மார்க்கமாகவே வாக்குப் பெட்டிகளைக் கொழும்புக்குக் கொண்டு வருவோம். ஆதலால் சில வேளைகளில் முடிவுகள் தாமதமாகலாம். எவ்வாறெனினும் துரிதகதியில் முடிவுகளை அறிவிக்கவே நாம் எதிர்பார்க்கிறோம்.
கடந்த தேர்தல் காலங்களை விட இம்முறை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தயானந்த திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக கரும பீடப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் சுமார் 4 மணிநேரம் முன்னதாக வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும் இன்று காலை நிலைமை சீரடைந்திருப்பதால் வழமை போன்று 3 மணி நேரத்துக்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்துக்குச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nessun commento:

Posta un commento