mercoledì 13 gennaio 2010

தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு திருவிழா-

தமிழ்த் தைத் திருவிழா

clip_image002

கல்தோன்றாக்  காலத்து முன்தோன்றிய மூத்ததமிழுக்கு வணக்கம்!. 

மாறிவரும் மாபெரும் உலகத்தில் மென்மேலும் மெருகுடன் விளங்கும் முத்தமிழுக்கும் வணக்கம்!

தமிழர்களின் பண்பாட்டிலே மனிதர்களின் பண்பையே வெளிக்காட்ட வழிகாட்டிய மூதாதையத் தமிழர்க்கும் வணக்கம் !

தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!. . . . . .

இப்படி முழங்கும் பாவேந்தர் அவர்கள் இன்னொன்றையும் இதில் இனிதாகவே திணித்துஞ் சொன்னார்

“தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்”

ஆம் அந்தத் தாய் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீராகத்தான் இருந்தாள் இன்று பல அசுத்தங் கலந்த சாக்கடைகளும் இணைந்து இந்தச் சமூகத்தை அபகரிக்கப்பார்க்கிறது. வேகவளர்ச்சியில் சாக்கடை கலப்பது சகஜந்தான் அதை வடிகட்டிக் குடிநீராக்குவது உங்கள் பொறுப்பல்லவா?

செய்நன்றியை நற்பண்போடு வெளிக்காட்டும் பாரம்பரியப் பண்பாடு தமிழர்களுடைய சிறப்புப் பழக்க வழக்கம் என்று சொன்னால் அது குற்றமாகாது. மாறாக மாபெரும் உண்மையே !

அத்தகைய தமிழர்கள் இன்று இடப்பெயர்வுக்குள்ளாகி அந்நிய கலாசாரத்திற்கு மாறிக்கொள்வது பற்றித் தப்பாகச்சொல்லாவிட்டாலும், தமிழ்ப்பண்பாடுகளையும் பாரம்பரியத்தையும் மறந்து போய்க்கொண்டிருக்கிற போதிலும் மறக்காமல் தமிழை வளர்ப்பதிலும் ஏராளமானோர் முன்நிற்பது பெருமைக்குரியதும் பாராட்டலுக்குரிய தென்பதும் வெளிச்சம்.

அத்தகைய தமிழர்களின் கலாசாரக் களிப்பாடலிலொன்றுதான் தைமாதத் தைப்பொங்கல் பெருவிழா.

||எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு||

என்ற பெருந்தகையின் பேச்சுக்கிணங்க வாழ்பவர்தான் தமிழ்க்குடிகள் என்பதனைத் தமிழர்களின் இத்தைப் பொங்கல்த் திருவிழாவும் தெளிவு படுத்துவது திண்ணம்.

அதாவது, உலகனைத்திற்கும் ஒளிமுதற் கொண்டு மாபெரும் சக்தியாக விளங்கும் சூரியனைக் கடவுளாகக் கருதிச் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாகப் பொங்கி மகிழ்விக்கும் தமிழர்களின் நன்நாளே அந்தப் பொங்கல்த் திருவிழாவின் பெருநாளாம்
தமிழ் வருடத்தின், முதல் மாதத்தின் முதல்த் தேதிதான் அந்நாளுக்கு உரிய திருநாள்.

ஒருவரைக் கௌரவிக்கும் பொருட்டு அவரை வீட்டிற்குக் கூப்பிட்டு விருந்து கொடுப்பது நடைமுறையிலுள்ள பழக்கமானாலும் அவர் வீட்டிற்கு வரும் முன் வீட்டைத் துப்பரவு செய்து உணவினைத் தயார் செய்து அவரின் வருகையின் போது அவரை மதிப்புடன் அழைப்பது

போலவே, அதிகாலை எழுந்து விருந்தாளியான கதிரவன் வருமுன் பலத்த ஆயத்தத்துடன் எதிர் பார்த்திருக்கும் கட்சிதமான பண்டிகை ||பொங்கல்ப் பண்டிகை.||

பழம்பெரும் புலமைப்பாட்டியாம் ஒளவை

“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோனுயர்வான்”

என்று வான் சிறப்பையும் அதனால் ஏற்படும் விளைவால், விவசாயிகள் ஊடாக நாடும், நாட்டு மக்களும் சிறப்புப் பெறும் என்பதைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் எடுத்துக்காட்டியபோதிலும் அவற்றிற்கு அடிப்படையாகவும், மறைமுகமாகவும் தொக்கியிருக்கும் கருப்பொருள் ஒன்று உள.

ஒளவைப் பாட்டி மட்டுமல்ல செந்நாப் புலவர் இந்த வான்சிறப்பை அற்புதமாக இரண்டு வரிகளில் ஏழே வார்த்தைகÙடாக எடுத்து இயம்புகின்ற அற்புதம் சிறப்பாக அமைந்துள்ளது.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

இத்தகைய வான் சிறப்பு சிறப்பாக அமைவதற்கு ,அகிலத்திற்கே அணையா விளக்காகப் பிரகாசிக்கும் பகலவனே பாலமானவன் என்பதுதானே அப்பட்டமான உண்மை.! அத்தகைய உண்மையை நன்கு உணர்ந்த எங்கள் தமிழ் மூதாதையர் இத்தகைய விழாவை அந்தப் பகலவனுக்கு வழங்குவதில் தப்பேது இருக்கமுடியும்?.

அப்பேற்பட்ட சிறப்புமிக்க மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் விழாவைப் புலம் பெயர் தேசத்தில்  தேக்கத்துடனே செய்யும் ஏக்கத்திற்கு ஆளான எம்நிலை பரிதாபத்திற்குரியதே !

“எங்கள் சொந்த மண்ணில் - அந்த
சொர்க்க பூமியில்
சந்தத்தோடும் சத்தத்தோடும்

சொந்தத்தோடும்
பொங்கிப் பாடும்
பொங்கலோ பொங்கல் - இன்னு;
மொலிக்கும் மங்கலவார்த்தை.!

புள்ளினங்கள் சப்திக்கும் - அங்கே
பூ மலர்கள் சங்கமிக்கும்
மாவிலைகள் சலசலக்கும் - தரையில்
மாக்கோலம் ஜொலிஜொலிக்கும்
நறுமணங்கள் கமகமக்கும் - பின்னர்
மத்தாப்பூக்கள் வெடிவெடிக்கும்

சின்னஞ்சிறுவர் சிரித்து விளையாட
கன்னிப் பெண்கள் அன்ன நடைபோட
அன்னையர்கள் பொங்கி இலைபோட
கதிரவன் கதிர்கள் எம்மை நாட
சலங்கை ஒலிகள் காதில் நடமாட
பொங்கி வழியும் பொங்கல்க் குடமாட

புத்தாடை தரித்து - கொத்து
பூமாலை முடித்து
வீதி யெங்கும் விழாக்கோலமாம்
சாலை யெங்கும் சந்தனமாம்

சந்தியெங்கும் மண் குடமாம்
பொங்கிவரும் பொங்கலிட்டு - பெண்கள்
பொன்னகைக்குப் போட்டியிடும்
பேரானந்தப் புன்னகையாம்.
  பொங்கல் பண்டிகை!!”

இப்படிச் சிந்தனை எனக்குச் சிறகடிக்கிறது.

இதை எண்ணும் போதே சொல்லெண்ணா மகிழ்ச்சி தாண்டவமாடும் என் நெஞ்சில். அதிகாலை சாணத்தால் தரை மெழுகி , மாக் கோலம் மண்ணிலிட்டு, மாவிலைத் தோரணங்கட்டி, சந்தனமும் குங்குமமும் தயார்படுத்தி , வாசற்படியில் அடுப்பு மூட்டி , புதுக்குடத்தில் பொங்கிப் போட ஆர்வத்துடனே ஓடித்திரியும் அந்தக் காலைக் காட்சி அட்டகாசமான கண்காட்சி.

பொங்கல்ப் பானையின் வாயினைத் தாண்டிப் பொங்கிவரும் பொங்கலைப் பார்ப்பதற்கென்றே விரைந்து வந்து வேடிக்கை பார்க்கும் அழகும் அற்புதந்தான் . அன்றாடம் அம்மாமார் அடுப்படியில் பொங்கிப் படைக்கும் அன்னத்திற்கு அண்மையில் வராத அப்பாமாரும் ஆர்வத்தோடு ஆடிப்பாடும் காட்சி அற்புதமோ அற்புதம்.

இதை இப்படியே ஐரோப்பாவில் செய்வதாகக் கற்பனை செய்தால் எல்லாம் மாறுபட்ட வாழ்வுதான். அடிக்கடி அடுப்பங்கரைக்கு அப்பாமார்தான் அதிகம் செல்வதுண்டு. அத்தோடு விறகு போட்டு அடுப்புக் கொழுத்த வேண்டும் என்ற அவசியங் கூட இங்கில்லை
வெட்கை காலங்களில் பொழுது போக்கிற்காக காடுகளில் உணவுகளைச் சுட்டு உண்பதற்கு விறகுகளைப் பயன்படுத்துவது மட்டும் உண்டு.

இயந்திர வாழ்க்கையும் சுதந்திரக் கட்டுப் பாடும் அதிகம்.

மண்சட்டி பானையில் சமைக்கும் உணவிலும் , விறகுவைத்து எரிக்கும் சமையலிலும் இருக்கும் ருசியோ ருசி அந்த நிலை இப்போது எங்கள் தேசத்திலும் சற்றுக் குறைந்து கொண்டுதான் போகிறது. எனினும் இத்தகைய சமையலில் உடல்நலம் பராமரிக்கப் படுவதாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டு கொண்டுள்ளார்கள்.
ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழரின் கலாசாரத்தில் வைத்தியமுறைகூட இணைக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்குள்ள பெருமையே அவற்றுள் ஒன்றுதான் இந்த தைப்பொங்கல் விழா.

உடல் ரீதியிலும் மனரீதியிலும் இத் திருவிழாக்கள் எத்தனையோ திருப்திகரங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாது மனிதநேயத்தினை வெளிக்காட்டும் மாபெரும் வெளிக்காட்டுகள் இங்கு இடம் பெறுகின்றது. குடும்ப உறவுகள் பலப்படுகிறது. தொலை தூரத்தில் வாழ்பவர்களுக்கிடையில் வாழ்த்துக்கள் என்ற பெயரில் தொடர்புகள் துரிதப்படுகிறது. பகிர்தல் ,விட்டுக் கொடுத்தல் ,புரிந்து கொள்ளல் போன்ற நற்பண்புகளைச் சீர்ப் படுத்த இப் பெருவிழாக்கள் அடிக்கடி மாறுபட்ட பெயரில் வந்து போகின்ற போதிலும் ,செய்த நன்றியை மறக்காமல் பிரதி அவரை நினைத்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவத்தைச் செலுத்தும் இத்தைப் பொங்கல் திரு விழா மிகச் சிறப்புடையதுதான். அன்று காலை நடக்கும் நிகழ்வு எல்லாவற்றையும் என்றுமில்லாதவாறு பார்த்துப் பார்த்துப் புன்னகை செய்வான் ஞாயிறவன்.

||தலைவாழை அதை வெட்டி, பொங்கலை அதில் கொட்டி|| படைத்துப் போடுவார்.
புன்னகைத்துக் கொண்டிருக்கும் அன்றைய விருந்தாளிக்கு நன்றி நமஸ்கரிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அப்போது பொங்கல்ப் பானையில் பொங்கல் பொங்கி வரும் காட்சியைக் கண்டதும் அஞ்சி அஞ்சி வெடி வெடிக்கும் சப்தம் நெஞ்சைப் பிளக்கும்.

பொங்கல் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் பண்பு மதவேறுபாடின்றி அன்றையதினம் பரஸ்பரம் இடம் பெறும் அத்தோடு தாம் பொங்கிய பொங்கலை அன்போடு அயலாருக்குக் கொடுத்து உண்ணும் அளப்பெரிய விருந்தோம்பல் அங்கே இணைக்கப்படுகின்ற அருமையான செயற்பாடு மட்டுமன்றி ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு ஏற்பட்டுவிட்ட நபர்களுக்கிடையில் இணக்கம் காணும் ஒரு கருவியாகக்கூட பலர் இவற்றைப் பயன்படுத்தியதைக்கூட அறியமுடியும் . ஒருவர் ஒருவரை மதிப்போடு வாழ்த்துச் சொல்லும் போது அவர் விரோதியாக இருந்தாலும் பதில் வாழ்த்துத் தெரிவிக்கும் கட்டாயம் இந்நாளில் ஏற்படுவதால் விரோதம் அங்கே விநோதமாக விடைபெற்றுச் சென்று விடுகின்றது. இப்பேற்பட்ட அற்புத நிகழ்ச்சியை அதே சிறப்புடன் அன்னிய தேசத்தில் அமுல்ப் படுத்தமுடியாத அபாக்கிய நிலைக்கு எம் இளைய தலைமுறை தள்ளப்பட்டு விட்டதல்லவா?!.

“தை பிறந்தால் வழிபிறக்கும்”  என்னும் வாக்கும் இதனைத்தழுவியே கைக்கொள்ளப்பட்டது. அனைத்துப் பிரச்சினைக்கும் பணம் ஒரு முக்கிய காரணம் இன்றைய நவீனத்துவத்திலும் சரி அன்றைய நாகரீகத்திலும் சரி ஒரு அரசின் அல்லது தனிமனிதனின் வளர்ச்சியிலும் பெரும் பொருள் ஈட்டக்கூடிய நடவடிக்கைகள் விவசாயம், மீன்பிடித்தொழில், மிருகவளர்ப்பு

என்பது வரலாறுகாட்டும் உண்மை. இதில் எவற்றை மேற்கொள்ள வேண்டுமாயினும் அதற்குக் கதிரவனின் கனிவான பார்வை வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் தை மாதத்தில் அனைத்து விளைச்சல்களும் அறுக்கப்படும் போது அனைவரிடமும் வசதி வாய்ப்பாகக் காணப்படும் எனவேதான் அந்நாளை தை பிறந்தால் வழிபிறக்கும் என்றனர்.

மனிதன் வாழப் பணம் அவசியம் .பணம் சம்பாதிக்கத் தொழில் அவசியம். எந்தத் தொழிலாக இருந்தாலும் அங்கு சூரியனின் இன்றியமையாத உதவி தேவைப் படுவதனால் தான் அத்தகைய சூரியனை நமஸ்கரிப்பதில் வருடத்தின் ஆரம்பமான முதல் மாதத்தின்

முதல்த் திகதியாம் தமிழ்த்திகதியில் தமிழர் பண்பாட்டிற்கமைய இந்தப் பொங்கல் விழா நன்றியோடு நினைவு கூரப்படுகிறது.

இங்கு கரும்பு, பால், பழம், நெல், போன்ற துணைப் பொருட்கள்  படைக்கப்படும் போது தலைவாழையில்  பொங்கலுடன் நன்றியோடு கதிரவனுக்காக இணைக்கப்படுகிறது.

இந்தப் பொங்கல் நாளுக்கு மறுநாள் உழவர்கள் தாம் தமது உழவுக்குப் பயன்படுத்திய மாடுகளுக்கான நன்றியைத் தெரிவிக்கும் நோக்குடன் “மாட்டுப்பொங்கலைச்” செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வீட்டில் மட்டுமன்றி வியாபாரஸ்தாபனங்கள், பாடசாலைகள் போன்றவற்றிலுங்கூட சிறப்பாக நடைபெறுகின்றது.

அத்தகைய நன்றியை ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துங்கூடப் பலர் மறக்காமல் பொங்கிப்படைக்கிறார்கள் சில ஐரோப்பிய நாடுகளில் வாழ்வோர் சூரியனைப்பார்ப்பதே அபூர்வமாக ஆகிவிடுகிறது இல்லையா?

இந்தச் சூரியன் உதிக்காமல் விட்டால் என்ன வாகும் என்று சற்று சிந்தித்தால்? . . . . ஒருவேளை இராப்பொழுது நினைவிற்கு வரும் ஓரளவு சமாளித்து விடலாம் என்று எண்ணத்தோன்றும் மாறாக இப்போது சூரியனால்  வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் வெப்பத்தைப் போன்று பலமடங்கு வெப்பத்தை ஒருநாளில் வழங்குமானால் இந்தப் பூமியின் நிலை என்னவாகும்.!!

உதாரணமாக ||கத்தானியா||வில் உள்ள ||வொல்க்கானா|| வைப் பாருங்கள் (எரிமலை) அது வெடித்துச் சிதறும் போது அதில் இருந்து வெளிவரும் நெருப்புப் பிளம்புகள் எவ்வளவு பயங்கரமானவை! அதனிலும் பல மடங்கு அதிக வெப்பத்தைக் கொண்டிருந்த போதிலும் அளவோடு பூமிக்கு வரும் கதிர்களைப் பற்றிச் சிந்திக்கத் தவறவேண்டாம்.

இந்தச் சம்பவங்களைச் சிந்திக்கும் போதுதான் கடவுள் என்றொருவரைப் பற்றிச் சிந்திக்கத் தோன்றுகிறது.

கண்களுக்குப் புலப்படாத கடவுளைப்பற்றிச் சிந்திப்பதிலும் பார்க்கக் கண்ணூடாகக் காணும் மனிதர்களை மனிதத்தோடு மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழர்களின் திருவிழாக்கள் தக்க காலத்திற் கொரு முறை வலம் வருகிறது.

கடவுளைப் புறக்கணிப்பதாகக் கருதவேண்டாம், புரியாதவர்களுக்கு அப்படித்தான் தோன்றும்.

“கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார் இதைத் தவிரத் தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை - இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகே நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்கிறான் “

இதனை நான் சொல்லவில்லை சுவாமி விவேகானந்தாவின் ஆழ்ந்த கருத்து இதே போன்றொரு கருத்தைத்தான் இரண்டாயிரத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நம்மோடு உள்ளவரும் உரைத்தார் என்பதனையும் மறக்க வேண்டாம்
||நீங்கள் ஒருவருக் கொருவர் அன்பு செய்யுங்கள்||       

இயலாதவர்களுக்கு உதவி செய்யும் போதும், சிறைக்கைதிகளைப் பார்க்கும்போதும் பசியாய் இருப்பவருக்கு உணவு கொடுக்கும் போதும். எனக்கே செய்தீர்கள் என்கின்றார் இயேசு பெருமான்.

எனவேதான் மேலே அவ்வாறு சொன்னேன். மனிதர்களை நேயத்தோடு மதிக்கும் போது கடவுளுக்குக் கிட்ட நீங்கள் உள்ளீர்கள் என்பதனை மறக்க வேண்டாம்.

இதனைத்தான் தமிழர் கலாசாரங்களில் கலந்து தமிழ்ப் பாரம்பரியங்கள் எமக்குத் தருகின்றது. நன்மை செய்த சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதோடே நேயமான வாழ்வைக் கற்றுக் கொள்ளவும் இது எமக்கு மீட்டல் அனுபவம் அல்லவா?
ஜப்பானின் கிரோசிமா நகரை நினைத்துப் பாருங்கள் ஆதித்தனின் அற்ப அனலின் சொற்பமே இத்தனை அபாயமானதென்றால் அவன் தன் சூரியப் பிரகாசத்தை அளவுக்கதிகம் அளித்துவிட்டால் இந்தப் பிரபஞ்சமே  அழிந்து விடுமல்லவா? ““Too much of anything is good for nothing”” என்னும் ஆங்கில வார்த்தையை நினைவுறுத்திக் கேடு விளைவிக்கும் நிலைக்கு எம்மை ஆளாக்காமல்

கொடுத்துக்கொண்டிருக்கும் அக்கினிக் கதிருக்கு நன்றி சொல்லிப் பொங்குவோம் புலம்பெயர் தேசத்திலும் பொங்கலோ பொங்கல்.

தமிழர்களின் கலாசார விழுமியங்களில் ஏராளமான நற்பண்புகள் பகிர்ந்து கொள்ள ஏதுவானவை.. எனவே எங்குதான் சென்றாலும், எந்த மொழியைக் கற்றாலும், அந்நியப் பிரஜா உரிமைக்காய் ஆவல் கொண்டாலும், அழகிய தமிழையும் அதனுடைய பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பதில் தலையாய கடப்பாடு தாய் தந்தையர்களாகிய இன்றைய தமிழனுக்குண்டு என்பதனை நினைவில் கொள்ளுங்கள். உலகை நன்கு அறிந்து கொள்ளுங்கள் அது மிக அவசியமும்கூட எனினும், உன்னதமான தமிழை, “எந்த மொழிகளுக்கும் இல்லாத பல சிறப்பம்சம் தமிழுக்குண்டு என்பதைப்” புரிந்து கொள்ளுங்கள்.
“இன்றைய தமிழர் நாம், என்றுமே தமிழர்தாம்” என்ற அடைமொழியுடன் அத்தமிழ்ப் பண்டிகையினையும் புலம் பெயர் தேசத்திலும் படையெடுப்போம்.

“பொங்கலோ பொங்கல்.”

Arupoothiஅனைத்து உறவுகளுக்கும் மலர்ந்த உள்ளத்தோடு மலரவிருக்கும்  பொங்கல் வாழ்த்துக்களை ஆண்டவன் நாமத்தில் “அருகன்” அள்ளித் தெளிக்கின்றேன் “வாழ்க”!!
வாழ்க வளமுடன்.!!
நன்றி - வணக்கம்.

2003ம் ஆண்டு அருகனின் அநுபூதி நூலிலிருந்து...

 

 

இவ்வருடம் தமிழர்களுக்கான புது வாழ்வு மலர விரும்பி வாழ்த்துகின்றதோடு எமது இணையம் அதற்கான ஆதரவையும் வழங்கும்...

Nessun commento:

Posta un commento