domenica 17 gennaio 2010

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

அருகனின் பாடல் வரிகள் 2003ற்கு முன்னர் புனையப்பட்டது.

கடவுள் வாழ்த்து

பல நதியின் திசைகள் கடலைச் சேரும்
பல பூக்களின் மென்மை மாலையில் கூடும்
ஸ்வரங்களின் சங்கமம் வரங்களில் ஆகும்
வந்தவை யாவும் இறைவனின் வாழ்த்துக்கள் ஆகும்.. . ஆ. .ஆ. .
01
இசையின் ஓசைகள் அசையும் - அது
அசையும் போது இதயம் அசையும்
அதை ஒதுக்காதே என்றும் வெறுக்காதே

ஓடுகின்ற குருதியில் ஒருதுளியேனும்
பாடுகின்ற பாடலில் ஆடிவந்து சேரும்
வாழுகின்ற வாழ்க்கையில் வலிவந்து சேரும்
பாடலதைக் கேட்க அது எங்கோ ஓடும்.

யார் தந்த பாடலிது
அவன்தந்த பாடலுக்கு
அள்ளித் தெளித்தேன்
ஆயிரம் ஆயிரம் பூவிது
02
மனிதம் மண்ணிலே பிறக்கும் - அது
பிறக்கும் முன்னே இசை அங்கு இருக்கும்
அது காற்றோடும் பெரும் கடலோடும் சென்று கலக்காதோ

இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்
இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்

இனம் மொழி வேறின்றி
காலை மாலை ஏதன்றி
பேதமில்லையே
இசையிலே மிதப்பேன்

****************************************+

பல்லவி
சோதரா என் சோதரா
நீ தானடா
இசைக் கண்ணைத்தந்த தாயும் நீயடா
நீ அண்ணன் இல்லை அன்னை
நான் உன் சேயடா
நான் உன் சேயடா
அனுபல்லவி

சிறுபிள்ளை எனக்காக நீதந்த உன்கைகள் கழுவாமல் நழுவித்தான் போனாயே
இசை என்னும் நதி நீயே அதில் நானும் நீராட
நீரின்றி கானல் நீராய்ப் போனாயே
புதுப்பாடல், புதுமேடை, புது இராகம், புதுத்தாளம்
நான் தந்தேன் கேட்காமல் நீயெங்கோ போனாயே
(1)
உலகெங்கும் அசைகின்ற காற்றை நீ குழல் ஊதி
அமிர்தத்தில் தேன் போல தந்தாயே
அதை நானும் ருசி பார்த்தேன் உன்னாலே
பார்க்காமல் நீ எங்கோ போனாயோ
உன்பிள்ளை உருவாக்கும் இசை வெள்ளம் உன்காதில்
சேர்ந்தாலே அதில் மோட்சம் காணுவேன்
இசைதந்த இறை நீயே
உனை இன்று நினைக்காமல்
என் பாடல் அரங்கேற்றம் வீணையா?
என்றும் வீண் ஐயா  (சோதரா. )
(2)
இசை என்னும் தோட்டத்தில் ஒருபூவாய் நான் பூக்க
நீர் விட்டு நீஎன்னைக் காத்தாயே
அதில் தோன்றும் வாசத்தில் நீ வந்து சுவாசிக என்பாடல் உனை இன்று அழைக்காதோ
நீரின்றித் தான் வாழும் நிலங்கொண்ட மரம்போல நீயின்றி நான் வாழத்தேவையா
இருகைகள் சேர்த்தெடுத்து
ஒரு கோடி வந்தனங்கள்
உன்பாதம் நான் தந்தேன் ஏற்றிடு
என்னைக் காத்திடு

 

என்ன சுகம்

வா பெண்ணே உன்னைத் தீண்டுகிறேன்
நிலை தாண்டுகிறேன்
தாமதம் ஏனடியோ!
உன்னை என்னை
தீசுடுமே அதில் நோய் வருமே
வா பெண்ணே வா . . . . . . . . . .
(1)
சுமை வந்தால் வந்து சுகந் தந்தாய்
இதமாக இதழாலே (2)
சொல்லு பெண்ணே சொல்லால் என்னைச் சொல்லி
சுவைத்தாயே மொழியாலே (2)
கடல் மீது அலைபோலே உன்காதல் என்னில் மோத
கரைபோல கரைந்தேனே நான் (2)
காணாமலே தான்போக
வா பெண்ணே
(2)
உந்தன் நெஞ்சில் கொஞ்சம் மஞ்சம் கொண்டேன்
மதிமறந்தேனே சுகமாக
எந்தன் கண்ணைக்கண்டு கையால் மெல்ல மறைத்தாயேநீ
வெட்கிச் சிரித்தாயடி
தூங்காமல் தீண்டாமல் விழி பேசும் போது (தான் )
தாங்காமல் தவித்தாளே
கண்ணை மூடினாளே மாது
வா பெண்ணே
(3)
சின்ன விரல் எந்தன் தலை கோதும்
அசைந்தேனே அதற் கிசைவாக
எரி மலைக் காத்தாய் மூச்சு என்னைச் சேரும்
அதில் எரிந்தேனே நான் மெழுகாக
பூவாநீ புயலாநீ என்ன மாயங்கள் செய்தாய்நீ
பாலாநீ பழமாநீ எந்தன் நாவிலே விழுந்தாய்நீ
வா பெண்ணே

 

(03)

ஆ. ஆ. . . ஆ. . . .

அம்மா உந்தன் பிள்ளை தான் -உன்
அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்

தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
வேதனையில் நானிருக்க ஆறதலாய் யார் வருவார்
இன்பமும் துன்பமும் உன் பெயர் சொல்லுதம்மா
(1)
சிட்டுச் சிட்டுக் குருவிக்கெல்லாம் தாய்ப் பாசம் புரிஞ்சிருக்கு
சிந்தையுள்ள மனிதருக்கு பாசம் புரியவில்ல
விக்கி விக்கி அழுதாலும் வேதனைகள் தீரவில்ல
தாய் மடியைப் போல ஒரு தாகம் தீரவில்ல

ஆண்டவனுக்குச் சோகம் இல்லை
அதனால தாயும் இல்ல
தாயே உந்தன் சேயைப் போல
சோகம் கண்டதில்லை  - ஆனாலும்
கண்கள் மீது  கண்ணீர் வந்தில்ல

 

04
வான் நின்று சூரியன்

வான் நின்று சூரியன் வந்து நடை போடுதோ!
வடிவான சந்திரனும் வெட்கப்பட்டு தலை நாணுதோ!
புரியாத பூவுலகம் புதிர் போடுதோ 2
என் மன்னன் என்முன்னே தோன்ற!
நிலவொன்று கால் கொண்டு தினம் நடமாடுதோ
நிலம் இன்று உடல்கொண்ட நிலவொன்றைத் தான் தாங்குதோ!
தூங்காமல் இதயந்தான் தடம் மாறுதோ! 2
என் மங்கை என்முன்னே தோன்ற!
(1)
பெண்-
மலை போன்ற தோள் உன்னில் யார் தந்தது
தோள் மீது சாய்ந் தாடிச்  சுகங்கண்டது
பனி போன்ற பார்வை தேன் யார் தந்தது
தேன் போன்று சுவை பார்க்க மான் வந்தது.
ஆண்-
கருங் கூந்தல் சிறையாகி ஏன் நின்றது
கவி நெஞ்சம் சிலையாகி ஏன் சென்றது
கரையாத நீள் வானம் ஏன் பெய்தது
அதில் நானும் நீராட ஏன் வந்தது.
கவி மானும் கலை மானும் கலைக் கூடமோ
கண்ஜாடை தானங்கு புதுப் பாடமோ
(2)
ஆண்-
மயில் கூட்டம் உந்தன் நடை பார்க்க தான் வந்தது
அவை நாணி முகங் கோணி வாடி நின்றது
முகில் கூட்டம் உந்தன் கூந்தல் பார்க்க வந்தது
மழையாகி மண்ணில் சோகம் தீர்த்து சென்றது
பெண்-
புயல் வந்து புதுப் பாதை ஏன் சென்றது
உனைக் கண்டு பயந்தோடி தான் சென்றது
தையல் நெஞ்சம் தடுமாறி ஏன் நின்றது
தாளம் பூவின் மணம் வந்து சேதி சொன்னது
வானும் மண்ணும் காதல் கொள்ள மழை தூவுமோ
நானும் நீயும் காதல் கொள்ள மலர் தூவுமோ!

 

05
பல்லவி
நீதான் எந்தன் பௌர்ணமி
நீதான் கண்ணில் ஓர் மணி
நீதான் எந்தன் பௌர்ணமி
அனுபல்லவி
சென்றாய் அந்த நாள் முதல்
கண்டேன் இங்கு தான் இருள்
சரணம்-1
மேகம் காண்கிறேன் மறைவாய்த் தெரிகிறாய்
ஓளியைத் தேடினேன் இருளாய்த் தெரிகிறாய்
காதில் மோதிடும் கவிதை கேட்குதே
கானல் நீரதாய்த் தேட ஓடுதே
மாதத்தில் ஒருமுறை நீவந்தால் -என்
மனமது மகிழும் தெரியாதா
மேகத்தைப் போலே நானிருப்பேன் -எந்தன்
தாகத்தைத் தீர்க்க வருவாயா
கண்ணே யுன்னைக் கண்டால் எந்தன்
கண்ணில் மின்னல் மோதுதே
பூவே யுன்னைக் கண்டால் நெஞ்சம்
எங்கும் பூக்கள் பூக்குதே
சரணம்-2
அல்லி மலரைப்போல் நானே இருக்கிறேன்
மெல்ல வெளியில் வா தானாய் மலருவேன்
புனலில் அலையாய் நான் கடலில் மிதக்கிறேன்
உன்னைக் கண்டாலே அலையாய் அடிக்கிறேன்
நான் படும் பாடு தெரியாதா -பெரும்
பாரங்கள் இருக்குத் தீராதா
பறக்கத்தான் நினைத்தேன் சிறகில்லையே -என்
கனவுகள் உனக்கு விறகில்லையே
என்னை எரித்தால் என்ன? புதைத்தால் என்ன?
இந்த நிலவின் ஒளியைத் தேடுவேன்
என்னை வெறுத்தால் என்ன மிதித்தால் என்ன
வேதம் போல உன்னை ஓதுவேன்

 

சின்னச் சின்னச் சிரிப் பொலி

தன்னன னானன . . . . . . . . . .
சின்னச் சின்னச் சிரிப் பொலியில்
சின்னச் சின்னச் சிரிப்பொலியில்
பூஜைகள் செய்தேன் - அதை
வண்ண வண்ண பூக்கள் போல
பாக்களில் தந்தேன்
1
மாட்டுக்கொட்டில் மாட்டுக்கொட்டில் உந்தன் மாளிகை ஆ. . ஆ. . . ஆ.
மாட்டுக்கொட்டில் மாட்டுக்கொட்டில் உந்தன் மாளிகை
எந்தன் மனமிருக்கு வந்து சென்றால் வண்ணமாளிகை
எந்தன் மனமிருக்கு வந்து சென்றால் வண்ணமாளிகை
சுமைசுமந்து சோர்ந்திருந்தால் சொன்ன வார்த்தைகள்
சுமைசுமந்து சோர்ந்திருந்தால் சொன்ன வார்த்தைகள்
சொற்க வழிதனை அமைத்துவிடும் தெய்வவார்த்தைகள்

2
அல்லி முல்லை மல்லி எல்லாம் வாடிடும் பூக்கள் ஆ. . ஆ. . . ஆ. . .
அல்லி முல்லை மல்லி எல்லாம் வாடிடும் பூக்கள்
அள்ளித்தந்து சொல்லிக்கொள்வோம் ஆயிரம் பாக்கள் .
அள்ளித்தந்து சொல்லிக்கொள்வோம் ஆயிரம் பாக்கள் .
அள்ள அள்ளக் குறையாத அற்புத வார்த்தை
அள்ள அள்ளக் குறையாத அற்புத வார்த்தை
ஆண்டவனில் அடிகளிலே அடியேனின் வாழ்க்கை

3

யாழினிமை தேனினிமை சொன்னவர் யாரு ஆ. . ஆ. . . ஆ. . .
யாழினிமை தேனினிமை சொன்னவர் யாரு
உந்தன் பேரினிமை பேரினிமை கண்டவர் யாரு
உந்தன் பேரினிமை பேரினிமை கண்டவர் யாரு
பூமிக்கொரு சாமிவந்த சரித்திரங் கேளும்
பூமிக்கொரு சாமிவந்த சரித்திரங் கேளும்
இந்தப் பூவுலகம் புனிதமாகும் வரந்தரக்கேளும்

 

7)

மடி கொடு மடி கொடு நிலவே
மனந் தினம் தவிக்குது தினமே!
இடங் கொடு இடங்கொடு மலரே
இதயங்கள் கிடக்குது மூடியே!

புயலொன்று அடித்தது சொன்ன வார்த்தை தொலைந்தது
இடியொன்று விழுந்தது இன்ப மெல்லாம்  முடிந்தது

சரியா விதி சரியா
வழி இதுதான்
சொல்லும் முடிவா!. . . .

நிலத்தினில் நிழல் விழும் போதும்
கரத்தினில் உனை ஏந்தப் போதும்
கடலினில் நதி விழப் போகும்
கானலாய் என்னுயிர் மாறும்

 

8)

அன்பே உன்னில் சாய்ந்து தூக்கம்
போனதே இன்று -அட
தூக்கம் போனதே இன்று
கண்ணே உன்னைக்காண
காதல் தோன்றுதே இன்று -அட
காதல் தோன்றுதே இன்று
தீயா தீயா
நீயா நீயா
மெய்யா மெய்யா
அது
மெய்யா மெய்யா
காதல் காதல் காதல் காதல் கண்களில் மோதல்  -இரு
உள்ளங்கண்டதே ஊடல்
மேகம் மேகம் மோதும் சில மேளச் சத்தங்கள் கேட்கும் (-உடன்
மேகம் பொய்கையில் சேரும் )
பூக்கள் பூக்கும்
காதல் பார்க்கும்
நாளும் நாளும்
தானே வாழும்
நானும் நீயும் நீயும் நானும்.
பெண்ணே உன்னைத் தேடி
நெஞ்சம் நோகுதே வாடி - என்
மஞ்சம் நோகுதே வாடி
பூவை வண்டு தேடும்
கண்டு கொள்ள நீ வாடி - தேனை
உண்டு கொள்ள நீ வாடி
பூவா நீயா
பூவா நீயா
தேனா நீயா
நீதான் தேனா

Nessun commento:

Posta un commento