lunedì 19 aprile 2010

நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும் அனலை நிதிஸ் ச. குமாரன்

sarath-magintha நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும்
அனலை நிதிஸ் ச. குமாரன்
கடந்த மே மாதத்துடன் முப்பது வருட ஈழத் தமிழரின் ஆயுதவழிப் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்த சிறிலங்கா, ஜனாதிபதிக்கான தேர்தலை ஜனவரி நடாத்தினார்கள்.  மகிந்தா மீண்டும் அமோக வெற்றிபெற்ற கையுடன் நாடாளுமன்றத்திற்கான தேர்தலையும் இந்த ஆண்டே நடாத்தி நாடாளுமன்றத்தையும் தனது வசம் கொண்டுவரவேண்டும் என்ற ஆதங்கத்துடன் இந்த தேர்தலையும் ஏப்ரல் 8-ஆம் திகதி நடாத்தி அதிலும் மகிந்தாவின் கூட்டணி வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 

சிங்கள தேசம் மகிந்தாவின் கட்சிக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள்.  எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கணிசமான தோல்வியை சந்தித்து இரண்டாவது எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.  விடுதலைப்புலிகளின் ஆசியுடன் தொடங்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான வெற்றியைப் பெற்று 14 உறுப்பினர்களை சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.  தமிழீழத் தேசமோ இந்த தேர்தல் மூலமாக பல செய்திகளை தெரியப்படுத்தியுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.
முதலாவதாக அவர்கள் சிங்கள தேசத்தின் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று தான் தமிழ் வாக்கு எண்ணிக்கையின் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.  குறிப்பாக விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் எதனை கூறினார்களோ அதனை வேத வாக்காக எண்ணி ஈழத் தமிழர் பெருவாரியாக வாக்களித்தார்கள்.  இதனை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது.  ஆனால் ஈழத் தமிழ் மக்களோ முன் எப்பொழுதும் இல்லாத ஒரு துக்கமான சூழலை இன்று சிங்கள தேசத்தின் மூலமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  அவர்களின் வாழ்வாதாரம் இன்று ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் யாழ் நாச்சிமார் கோவில் பகுதியில் நடந்த நிகழ்ச்சி தமிழருக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகின்றது.  அதாவது சிங்கள வணிகர்கள் தமிழரின் வணிகத்தை மழுங்கடிக்க அவர்களின் வாழ்வியலை சிதறடிக்க அவர்களை மேன்மேலும் பொருளாதார ரீதியாக பின்தள்ள பல பிரயத்தனங்களை தமிழர் பிரதேசங்களில் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.  மேலும் சிங்கள தேசம் தமது சமயத்தை தமிழர் பிரதேசங்களில் வேகமாக நிர்மாணித்து வருகின்றார்கள்.  அத்துடன் தமிழர்களின் சில முன்னோடி கல்லூரிகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படுகின்றது.  இந்த தோரணையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது.  
தமிழீழ தேசம் வேறு சிங்கள தேசம் வேறு
நடந்து முடிந்த தேர்தல் தமிழீழ தேசம் வேறு சிங்கள தேசம் வேறு என்று தெளிவாக புரியப்படுத்தப்பட்டுள்ளது.  விடுதலைப் புலிகளின் கள முனை வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிரும் புதிருமான கருத்தை வெளியிட்டதனால் பல சிக்கல்களை எதிர்கொண்டார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.  குறிப்பாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தரமுடியும் என்ற கேள்விக்கு எந்தவொரு தீர்க்கமான முடிவையும் தரவில்லை.  மாறாக தமிழரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஈழத் தமிழரின் இன்றைய வாழ்வியலை எவ்வாறும் மீட்டு தமது பிரதேசங்களில் மீண்டும் வாழ வழி வகுக்க உதவுவதாக வாக்குறுதியளித்தார்கள்.  
வடகிழக்கில் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையைப் பார்க்கும் பொழுது தமிழர் தேசம் சிங்கள தேசத்தை ஒரு போதும் நம்பவில்லை எனவும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது சுய லாபங்களுக்காக வேலைத்திட்டங்களை தீட்டி தமிழரின் துன்பத்தில் குளிர்காய முனைகின்ற மாதிரியான போக்கை நடந்து முடிந்த தேர்தல் தரும் செய்தியாக கருத முடிகின்றது. 
நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் மௌனத்தின் மூலம் பலமானதொரு செய்தியை உலகிற்குத் தெரிவித்துள்ளார்கள். அது என்னவெனில், தாம் சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் தமது நலன்களைத் தேட விரும்பவில்லை என்பதாகும். யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 721,359 வாக்காளர்களில் 168,277 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 65,119 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 9 வீதமானவர்கள் என்பதும், வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 266,975 வாக்காளர்களில் 117,185 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 41,673 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில் 15.6 வீதமானவர்கள் என்பதும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 333,664 வாக்காளர்களில் 195,368 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 66,235 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில்  19.85 வீதத்தினர் மட்டுமே. அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 420,835 வாக்காளர்களில் 272,462 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குக்கள் 26,895 மட்டுமே. இது, மொத்த வாக்காளர்களில்  6.39 வீதத்தினர் மட்டுமே. திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான, அதாவது 80 வீதத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள நாடாளுமன்றத்திற்கான இந்தத் தேர்தலை நிராகரித்து, மௌனமாகத் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதிக்கான தேர்தலில், மலையகம் உட்பட வட-கிழக்குத் தமிழர்கள் ராஜபக்சாவை நிராகரித்ததுடன், சிங்கள தேசத்திற்கான அரசுத்தலைவர் ஒருவருக்கு எதற்காக தமிழ் தேசம் வாக்களிக்கவேண்டும் என்ற கருத்துப்பட தமிழீழ தேசம் செயல்ப்பட்டது.  சிங்கள தேசத்தில் இயங்கும் நாடாளுமன்றத்தின் ஊடாக தமிழரின் அரசியல் அபிலாசைகளை கடந்த ஆறு தசாப்தங்களாக பெற முடியாதவற்றை எப்படி இனிவரப்போகும் காலங்களில் குறிப்பாக மகிந்தா முன் எப்போதும் இல்லாதவாறு வெற்றி மமதையில் இருக்கின்றார்.  குறிப்பாக தமிழரின் இராணுவ வலிமை தன்னால் சிதறடிக்கப்பட்டதாகவும் அவர்களின் எதிர்காலமே தனது கையில் இருப்பதான மமதையில் இருக்கின்றார்.  விடுதலைப் புலிகளில் இராணுவ வலிமை ஓங்கியிருந்த காலத்தில் கூட மாநில சுயாட்சி வழங்க முடியாது என்ற கொக்கரித்த சிங்கள தேசம் எவ்வாறு புலிகள் இல்லாததாக கூறப்படும் காலத்தில் வழங்க முன் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  ஓன்று மட்டும் உண்மை, அதாவது சிங்கள தேசம் ஒரு போதும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை சமாதானம் மூலமாக தீர்க்க முன் வராது மாறாக தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்கி முழுத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக பிரகடனப்படுத்தும் காலத்தைத் தான் சிங்கள தேசம் தமிழருக்கு அளிக்கும் தீர்வாக இருக்கும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தனிப்பெருங்கட்சி
சிறிலங்கா பாராளுமன்றத்தில் மூன்றாவது தனிப்பெருங்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.   அதைவிட  வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிக்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ்மக்கள் தெரிந்தெடுத்து ஆணைப்படுத்தியிருக்கின்றார்கள்.  தேர்தலில் போட்டியிட்ட ஏனைய சகல தமிழ்க்கட்சிகளும் சுயேட்சைகளும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
பல தமிழர் சிங்கள தேசத்திற்கான நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தாலும் அதிகப்படியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழர் பிரதேசங்களில் இருந்து தெரிவாகி இருப்பதனால் அவர்கள் முன் உள்ள பணி என்னவென்றால் அவர்களின் தேசிய பிரச்சனையை சமாதான வழிமூலமாக கொண்டுவர வேண்டும் என்பதே.  இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படிக் கையாளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  அத்துடன் தாம் ஒருபோதும் தமிழரின் தேசிய பிரச்சனையில் இருந்து விலகப்போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருப்பதானது தமிழர் மனங்களில் தேன் வார்த்தால் போல் உள்ளது.  குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை சரியான திசையில் பொருத்தமான அணுகுமுறைக்கு ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமையும் முன்னெடுக்கும் என்ற தங்களுடைய அசையாத நம்பிக்கையினை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு செவ்வியில் கூறியிருந்தார் பின்வருமாறு:  “எங்களது தேர்தல் அறிக்கையில் (விஞ்ஞாபனத்தில்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எதிர்காலத்தில் செயற்படும் என்பது மிகத்தெளிவாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.  எமது தமிழ்த் தேசிய விடுதலையின் அடிப்படைகளிலிருந்து எவ்விதத்திலும் பிறழாமல் உறுதியாக நின்றுகொண்டு நாங்கள் செயற்படுவோம்.  அதன் பொருட்டு நிலைமைகளினைப் புரிந்துகொண்டு எங்களுடன் இணைந்து செயற்படவிரும்பும் சகல தமிழ் சக்திகளையும் அணைப்பதில் எங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை.  அமையப்போகும் புதிய அரசாங்கமும் குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) மகிந்த இராஜபக்சவும் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக பேசவேண்டிய ஓரேயொரு தரப்பாக நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.  விரைவில் எங்களுடன் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளினை திருப்திப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளினை குடியரசு அதிபர் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கின்றோம். ஆரம்பிக்கவேண்டும்."
மேலும் அவர் கூறியதாவது: “சர்வதேச நாடுகளினதும், சிறப்பாக இந்தியாவினதும் ஆதரவுடன் தமிழ்மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகளினை முன்னெடுக்க இருக்கின்றோம். தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தின் அரசியல் அடையாளமும், சமூக இருப்பும், பொருளாதாரச் செழுமையுமாகும்.  இது மூன்று பரிமாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.  தமிழ்மக்களினை அரசியல் தெளிவுள்ளதும் விழிப்புடன் தொடர்ச்சியாக ஜனநாயக செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டக்கூடியதுமான பலம் வாய்ந்த மக்கள் கட்டமைப்பாகத் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வளப்படுத்த வேண்டியுள்ளது. இரண்டாவது தமிழ்த் தேசிய விடுதலைக்கான முயற்சிகளில் முழுமையான பலத்துடனும் தீர்க்கமான பார்வையுடனும் உறுதியான முன்னெடுப்புக்களினை சாத்தியமான நெகிழ்வுகளுக்கூடாக சகல தளங்களிலும் முன்னெடுப்பது.  மூன்றாவதும் முக்கியமானதும் தமிழர் தாயகத்தின் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியமர்வு அபிவிருத்தி ஆகிய விடயங்களினை சிறப்பாகவும் உரித்துடனும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய வழிமுறைகளினைக் கண்டறிந்து செயற்படுத்துவது.  இவற்றினை மேற்கொள்வதற்கு வேண்டிய தலைமைத்துவத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித கேள்விக்கும் அப்பாற்பட்ட வகையில் வழங்கும்."
இரா. சம்பந்தன் அவர்களின் கூற்று உண்மையானதாக தமிழர் ஒரு பக்கம் ஏற்றுக்கொண்டாலும் மறுபுறம் பலரின் கேள்வி என்னவென்றால் கடந்த ஆறு தசாப்தங்களாக பெற முடியாமல் போன ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையை எவ்வாறு குறிப்பாக ராஜபக்சாவின் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்தினால் பெற்றுத்தர முடியும்?  அத்துடன் இரா. சம்பந்தன் அவர்கள் ஒன்றும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் இல்லை.  இவர் பல அரசியல் தலைவர்களுடன் பணியாற்றியவர்.  இவரின் அரசியல் அனுபவம் என்பது முதிர்ச்சியானது.  இப்படியிருக்க இவரின் கூற்றை யாரும் புறம் தள்ள முடியாது அத்துடன் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழினம் கூர்ந்து கவனிக்க தொடங்கிவிட்டது. 
பிரச்சனைகளை கிளறிவிட்டு பூதாகரமாக்கிய பின்னர் இந்தியா சென்று பட்டறை போடுவதோ அல்லது வேறு நாடுகள் சென்று தஞ்சம் புகுவது என்பதோ ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொண்டுவராது.  இவைகள் மேலும் சொல்லொணாத் துயரை உருவாக்கிவிடும்.  குறிப்பாக பல விடுதலை கூட்டணித் தலைவர்கள் ஈழத் தமிழரின் கடந்த கால துன்பங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள்.  காரணம் இவர்கள் தான் ஈழத் தமிழரின் அரசியல் பிரச்சனையை மாநில சுயாட்சி மூலமாக தீர்க்க முடியாது என்றும் ஈழத் தமிழரின் ஒரே தீர்வு சுதந்திரத் தமிழீழமே என்று பிரகடனப்படுத்தினார்கள்.  இதனை ஒத்தே விடுதலை புலிகள் மற்றும் பல போராளிக் குழுக்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.  ஆகவே இரா. சம்பந்தனுக்கு இவைகள் எல்லாமே நன்றாகவே தெரியும் காரணம் இவரும் அந்த அரசியல் தலைமையின் முக்கிய உறுப்பினர்.  
நடந்து முடிந்த பல நிகழ்ச்சிகள் நிச்சயம் தமிழரின் இதயங்களை புண்படுத்தியவை.  இருப்பினும் அவர்களின் தாயக வேட்கை இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே எரிந்து கொண்டிருக்கின்றது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏகோபித்த தமிழரின் வாக்குகளைப் பெற்றிருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்.  அத்துடன் மூன்றாவது பெரும் அரசியல் கட்சியாக தமிழ் தேசிய முன்னணி சிங்கள பாராளுமன்றத்திற்குள் இருக்கின்றார்கள்.  இந்தியா மற்றும் சில நாடுகளின் ஆசிர்வாதத்தோடு சிங்கள பாராளுமன்றம் செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமிழரின் தேசிய பிரச்சனையை எப்படி கையாள்வார்கள் என்பது தான் இப்பொழுது எழும் பலத்த கேள்வி.  தமிழருக்கு மாநில சுயாட்சி அதிகாரம் அளிக்கும் நடவடிக்கை என்பது சிங்களத் தேசத்தின் தற்கொலைக்கு ஒப்பானது என்று கொக்கரித்த மகிந்த மற்றும் அவரின் கூட்டணிக் கட்சிகள் எப்படி தமிழரின் தேசிய பிரச்சனையை கையாளப்போகின்றார்கள் என்பது தான் தமிழர் முன் எழும் வலுவான சந்தேகம்.  மாவட்டங்களுக்கு அளிக்கப்படும் அதிகாரங்களுக்கு ஒத்ததான தீர்வைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கு பெற்றுத் தர சிங்களப் பாராளுமன்றம் செல்லுகின்றார்களோ அல்லது உண்மையிலையே தமிழீழத் தமிழரின் தாயகம் தன்னாட்சி உரிமை கொண்ட ஈழமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.  “குட்டக்குட்ட குனிபவனும் முட்டாள்இ குனியக்குனிய குட்டுபவனும் முட்டாள்” என்பதற்கு இணங்க தமிழீழத் தேசம் பல தடவைகள் சிங்களத் தலைமைகளினால் குட்டப்பட்டு தலைகுனிய வைக்கப்பட்டார்கள்.  சிங்கள தேசமும் பல தடைவைகள் தமிழ் தேசம் மீது பல தடவைகள் குட்டி அவர்களும் முட்டாள்கள் என்று நிரூபித்துவிட்டார்கள்.  இப்படியான முட்டாள்த்தனமான நிகழ்ச்சிகள் இரு தேசங்கள் மீதும் இனிமேலும் வீழ்ந்துவிடக்கூடாது. ஆகவே தமிழீழத் தேசிய பிரச்சனையை சமாதான வழியில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண கிடைக்கப்பெற்றிருக்கும் சந்தர்ப்பமாகத்தான் நடந்து முடிந்த தேர்தல் எடுத்துயம்பி நிற்கின்றது. 

Nessun commento:

Posta un commento