sabato 9 aprile 2011

புலிகளின் சர்வதேச ஒப்பந்தங்கள் மன்னாரை மையப்படுத்தியிருந்தால்,... !!!

A215B35967322A407D353C796E86FE

புலிகளின் சர்வதேச ஒப்பந்தங்கள் மன்னாரை மையப்படுத்தியிருந்தால்,... !!!

இன்றைய சர்வதேச நகர்வுகள் அனைத்தும் வியாபாரத்தையே நோக்கி காணப்படுகின்றமை தவிர்க்க முடியாதவை. இந்த வகையில் எமது தமிழீழப் போராட்டத்தின் உண்மைத்தன்மையினை சர்வதேசம் புரிந்து கொள்ளும் என்று எண்ணியமை எமது குற்றங்களே? புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் சர்வதேச பேச்சுக்களின் போது, மன்னார்ப்பகுதியில் காணப்படுகின்ற பெற்றோலிய வளத்தையும் மற்றைய வெளிநாட்டு முதலீடுகளையும் மையப்படுத்தியிருந்தால், தமிழீழப்பாதை திறந்திருக்கும் என்பது இன்றைய லிபியப்போர் நமக்கு வெளிக்காட்டுகின்ற மிகப்பெரிய பாடம்.

அமெரிக்காவின் ஆதிக்கத்திற்குப்பங்கம் விளைவிக்கும் எந்த விடையத்திற்கும் ஐரோப்பிய அரசுகள் சம்மதிப்பதில்லை என்பது வெளிப்படுகின்றது. ஆதிக்க அதிகாரம் தன்னிடம் மட்டும் இருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகின்றது. இந்தவகையில் சர்வதேசத்தில் எண்ணை வளத்திலும், ஆயுத விற்பனையிலும் முக்கிய இடத்தை வகிக்கும் கடாபியின் ஆட்சி நீடித்தால், அவ்வாட்சியால் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு தலைவராக இருக்கும் அமெரிக்காவிற்கு பல கெடுபிடிகள் வந்துவிடக்கூடும் என்பதற்காகவே இன்றைய லிபியா போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

புலிகளின் முப்பது வருட ஆயுதப்போராட்டம் அமெரிக்காவின் கண்களுக்குத்தெரியவில்லையாம், லிபியாவின் திடீர் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மட்டும் கண்ணைக்குத்தியதாம். முப்பது வருடமாக தமிழர்களுக்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஐ.நா. அமைப்பின் அறிக்கைமூலம் பல தடவைகள் வெளியிட்டிருந்தும் அதற்கு மாற்று வழிகளைக்காட்டாத அமெரிக்கா விற்கு, லிபியாவின் ஆட்சித்தலைவருக்கு எதிரான கும்பலின் அழிவிற்கு மட்டும் மாற்று வழிதேவையாம்!!! உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் தமிழர்கள் கூட்டங்கூட்டமாக கூடியும், எமது நிலையினை எடுத்துக்காட்டியும், தீக்குளித்து மரணித்துக்காட்டியும் புரிந்து கொள்ளாதவர்கள் ஒரு சில வாரத்தில் இடம்பெற்ற லிபியச்சிக்கலைத்தீர்க்க எதற்கு மல்லுக்கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள் என்று தெளிவாகப்புரிந்திருந்தும் மற்றைய நாடுகளும் இணைந்து இந்த போரா நடாத்துவது வேடிக்கையாக இருக்கின்றது. எ ம்மினம் செத்துமடிந்தபோது, மனிதாபிமானம் தெரியவில்லையாம் லிபியாவில் மக்கள் சாகின்றதாம் … லிபியா மக்களின் உயிர் மீது இருக்கும் மதிப்பு எம்மினத்தின் உயிருக்கு இல்லையாம்… என்ன கொடுமை கடவுளே!!! எம்மக்களின் ஏக்கத்திற்கும் இழப்பிற்கும் பதில் தெரிவதற்காவது, வந்த சுனாமி அமெரிக்காவிற்கு வந்திருக்கக்கூடாதா? வெடித்த அணுமின் குதம் அங்கு வெடித்திருக்கக்கூடாதா என்ற கெட்ட எண்ணந்தான் எழுகின்றது. அங்கு சுனாமியில் பாதிக்கப்பட்டும் அணுவால் சேதப்பட்டும் மக்களும் இயற்கையும் பாதிப்படைந்திருக்கும் போது, அதற்கு உதவிக்கரம் நீட்டாது ஓடிப்போய் மற்ற நாடுகளையும் கூட்டுச்சேர்த்து எதற்கு லிபியாவுடன் இந்தப்போர்… அணுமின்தாக்கம் உலகத்தின் வளங்களையும் பாதிப்படையச்செய்யும் என்பது வெளிப்படை உண்மை. ஆனால் லிபியா வின் விடயத்தால் பெற்றோலிய தற்காலிகத்தாக்கமே அதிகம் இப்படியிருக்க எது தேவை என்பதனை தவறாக நிர்ணயித்து எதிர்காலத்தில் மனிதனையே அழிவிற்குள் கொண்டு செல்கின்றது அமெரிக்கா ஆட்சியகம். இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது, தற்போது வெடிப்பிற்குள்ளான அணு ஆலையின் வெடிப்புக்கூட அமெரிக்காவின் சதியோ என்று எண்ணத்தோன்றுகின்றது. அணுபோகாத இடத்திலும் அமெரிக்கா போகும் என்று எண்ணத்தோன்றுகின்றது…

மீண்டும் தமிழர்கள் இணைந்த பலம் பொருந்திய அமைப்பொன்று உருவெடுத்தாக வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அது ஆயுதபலத்திலா அல்லது ஆட்சிபலத்திலா என்பதனை காலத்தின் கையில் நிற்கும் நாம் ஒவ்வொருவரும்தான் தீர்மானிக்க வேண்டும். அருகன்

முன்னைய பகுதி…

புலிகள் அமைப்பு சர்வதேசத்திற்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள்… அருகன் (புதிய தொடர் – 2011-01)

மற்றைய வரலாறுகள் கற்றுத்தரும் பாடங்களிலும் பார்க்க, நடைமுறையில் அதிக பாடங்களைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழர்களின் கடந்த முப்பது வருட சம்பவங்களில், தமிழர்களே கற்றுக்கொள்ள வேண்டிய பல லட்சக்கணக்கான பாடங்கள் புதைந்து கிடக்கின்றது.

வரலாறு தொடர்பாக ஆதாரங்காட்டி எழுதும் எழுத்தாளர்கள், மற்றும் விமர்சகர்களுக்கு ஈழத்து வரலாறே படிப்பினையாகவும், நடைமுறை ஆதாரமுமாக இருக்கும் போது அந்நிய வரலாற்றில் பாடங்கற்பிப்பது தேவையற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.

இன்றைய நடைமுறையிலேயே பல உண்மைகள் வெளிப்படாமல் இருக்கும் போது, பலவருடங்கள் கடந்த அதிலும் அந்நிய வரலாற்றில் காணப்படும் சம்பவங்கள் மட்டும் எப்படி உண்மையானது என்று ஆதாரங்காட்டமுடியும் என்ற கேள்வி எழவில்லையா?... சந்திரிக்கா அம்மையார் உயிருடன்தான் இருக்கின்றார், மகிந்தவும் உயிருடன்தான் இருக்கின்றார், புலிகளின் பல தலைவர்களும் புலிகள் அமைப்பின் பல முப்கியஸ்தர்களும் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றார்கள்… அப்படி இருக்கும் போது இறுதிக்கட்டப் போரில் நடந்த பல சம்பவங்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்ற போது, அவ்வாறான சம்பவங்களை துருவி ஆராய்ந்து சரித்திரத்தில் உண்மையினைப்பதிக்க முடியாத ஆராய்சியாளர்கள் பல வருடங்கள் கடந்த பின்னர் ஆதாரங்கள் என்று சொல்லும் அல்லது சொல்லப்போகும் முடிவுகளை உண்மை என்று உறுதிப்படுத்துபவர்கள்யார்???

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை சிங்கள அரசு தூக்கி வைக்கப்போவதில்லை, அதுபோல மகிந்தவின் சிறப்புக்களை எப்போதும் புலிகள் இயக்க இயங்கும் உறுப்பினர்கள் மேன்மைப்படுத்தப்போவதில்லை… இப்படி இருக்கும் போது எப்படி உண்மை நிலைக்கும்!!???

கனடாவில் தமிழர்களுக்கிடையில் பிளவு, சுவிஸ் தேசத்தில் அதே போன்று பல பிளவுகள், நாடுகடந்த அரசு என்ற அமைப்பிற்குள் இன்னும் சிக்கல்கள்-பிளவுகள், முன்னாள் புலிகள் அமைப்பினருக்குள் பிளவுகள், தன்னிச்சையாக தமிழர்களுக்கு ஆயிரம் நன்மைகளைச் செய்வோரை ஏற்றுக்கொள்ள மற்றைய அமைப்புக்களும், சாராத தமிழ் ஊடகங்களும் மறுப்பும் மறைப்பும்,
… … இப்படி இருக்கும் போது யார் யாரை வரலாற்றில் பதியப்போகின்றார்கள். அது எப்படி வரலாற்றில் பதியப்படப்போகின்றது.

ஒரு இணையத்தில் தவறுதலாக வெளியிட்ட சம்பவத்தையோ அல்லது செய்தியையோ, திருத்துவதற்கும் , அவற்றை ஏற்று மாற்று கருத்தை விடுவதற்கும் இன்றுள்ள எந்த ஊடகம் முன்நிற்கின்றது?

தமிழர்கள் நாம் போராட்டங்களை மேற்கொள்கின்றோம், ஆனால் யாரும் நேரடியாக தலைகொடுக்க மறுக்கின்றார்கள்! சிங்கள அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்க முன்வரும் தமிழர்களை பார்த்தால் அவர்கள் வேறு தேசியத்தை உடையவர்களாகக்காணப்படுகின்றார்கள்… மின்னஞ்சல்கள் மற்றும் இணைய நடத்துனர்கள் யாரும் தமது சொந்த பெயரை இட்டதாகக்காணவில்லை. தம்மைப்பற்றி மற்றைய தமிழர்களுக்கு மறைவாக வெளிப்படுத்தவே முயல்கின்றார்கள், அதற்கு பாதுகாப்புக்காரணம் என்ற ஒன்றைக் கூறினால், யாரிடம் இருந்து பாதுகாப்பு என்ற கேள்வி எழுகின்றதல்லவா? … அவ்வாறு இருப்பின் நீதியான கோரிக்கைகளுக்காகப்போராடும் போது ஏன் மறைவாக இருக்க வேண்டும் என்ற இன்னொரு கேள்வியும் வெளிப்படுகின்றதல்லவா? ஒரு தனி அரசை நடாத்திய புலிகள்கூட சர்வதேசத்தில் அதிலும் நோர்வேக்குச் செல்லவோ அல்லது வேறு தேசத்திற்குச்செல்லவோ “தமிழீழத் தேசிய கடவுச்சீட்டை” பாவிக்கவில்லை என்பது பெரும் வேதனையினைத்தருகின்றது!!!.

உலகத்தில் அன்றைய நடைமுறை அரசிற்கு எதிராகச்செயற்பட்ட பல தலைவர்களின் வரலாற்றுப் பதிவு என்று சொல்லப்படுகின்ற ஆதாரங்களைப்பார்க்கும் போது அத்தகவல்களை மறைத்து வைப்பதற்கே விரும்புகின்றனர். அது அத்தலைவர்களைப் பின்பற்றும் மற்றையவர்களுக்கு ஒரு துணிச்சலையும் அவர்களைச் சான்று வெளிப்படுகின்றவர்களுக்கு ஒரு திடத்தையும் கொடுக்கும் என்ற உளவியல் போக்கே காரணம். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எப்படி வரலாற்றை எதிர்காலத்திற்கு உண்மையாக வழங்கமுடியும்?

கடந்த 2003ம் ஆண்டு எனது நூல் வெளியீட்டின்போது அந்நூலிற்கான விமர்சனத்தை மேற்கொண்ட ஒரு நபர் தனது பேச்சில் “ புலிகளின் தலைவரைப்பற்றி மிகச்சிறப்பாகவும், உயர்வாகவும்” பேசித்தள்ளினார். ஆனால் அந்த பேச்சின் காட்சிகளை 2009க்கு பிற்பட்ட காலத்தில் இணையத்தில் இருந்து அகற்றிவிடும்படி வலியுறுத்தினார்… இதில் இருந்து அத்தலைவனுக்காக அவர் ஏற்கனவே பேசிய வார்த்தைகளிற்கு எத்தனை தூரம் முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்றும் அத்தலைவன்மீது வைத்த விசுவாசம் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்ற சந்தேகம் எழத்தோன்றவில்லையா?

ஏற்கனவே “மலரும் மா தமிழீழம்” என்ற எனது 2007ம் ஆண்டு நாவலில் குறிப்பிட்டது போல் “இவர்களை நம்பியா எமது தமிழீழத்தை இவர்களிடம் ஒப்படைப்பது?” என்ற கேள்வி இப்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதே நூலில் எழுதப்பட்ட இன்னொரு விடயம் நாளை தமிழீழம் மலரும் போது தமிழீழ தூதராலயத்தில் அவ்வாறானவர்களையா அமர்த்தப்போகின்றோம் என்ற கேள்விகளும் எழுகின்றதல்லவா?

தூதராலயம் என்றதும் இடையறுத்த கேள்வி ஒன்று எழுகின்றது! அதுவாகில் நா.க.அ. என்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை ஆரம்பித்துள்ள எமது புத்திஜீவிகள் அதற்கான காரியாலயங்களை ஆரம்பிக்கும் முன்னர் தூதராலயத்தை ஆரம்பித்துள்ளமை சிரிப்பாக உள்ளது! இது அவர்களை கேவலப்படுத்தவல்ல, மாறாக எடுக்கும் காரியங்களில் ஆணித்தரமான அத்திவாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே! கனடாவில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், பிரித்தானியாவில் ஏராளம் தமிழர்கள் இருக்கின்றார்கள், சுவிசில் பெரும் தமிழ் விசுவாசிகள் இருக்கின்றார்கள்… இப்படி இருக்கும் போது அங்கெல்லாம் அலுவலகங்களை அமைக்காமல், அல்லது தூதராலயங்களை அமைக்காமல் எங்கோ கொண்டு தூதராலயத்தை அமைத்தமை திடமற்ற செயலைக்காட்டுகின்றது. மேலும் அத்தூதராலயங்களில் யார் எதை நோக்கி அணுகப் போகின்றார்கள் என்ற கேள்விகளும் உள்ளன………..
நான் சில அமைப்புக்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றேன். அவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றிலும் அதற்கான செயற்பாடுகள் இருக்கின்றன. ஏவ்வாறான செயற்பாடுகளை அவ்வமைப்பு மேற்கொள்கின்றன என்ற வெளிப்படையான ஒரு அறிக்கையே காணப்படுகின்றது. இது இப்படி இருக்க நான் ஒரு தமிழீழப்பிரஜையாக நா.க.அ. அணுகவேண்டி பல தொடர்புகளை மேற்கொண்டு பார்த்தேன். அவை ஒன்றுக்குக்கூட பதில் வந்ததாக இல்லை! மேலும் காலத்திற்குக்காலம் ஒரு இணையம், காலத்திற்குக்காலம் ஒரு மின்னஞ்சல்… இது தனது மக்களையே அந்த அரசு அவமதிப்பதாகத்தோன்றாதா?

திரு உருத்திர குமார் அவர்களுக்க ஒரு ஆலோசனை வழங்க முனைகின்றேன். தங்கள் பேச்சில் வசனங்களில் “நான்” என்ன உச்சரிப்பின் ஆரம்பங்களும் நாங்கள் என்ற வசனத்தின் முடிவுகளுமே அதிகமாகக்காணப்படுகின்றது. அவற்றை இனிவரும் தங்கள் பேச்சுக்களின் சீர் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். உங்கள் செயற்பாடுகளில் முன்னேற்றம் இருந்தாலும் தங்கள் வழங்குகின்ற பேச்சுக்களால் தங்கள் தரம் தமிழில் குறைவென்ற ஐயப்பாடு புலத்தில் வாழ்கின்ற இளையோர் மத்தியில் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே எடுத்க்காட்ட நேர்ந்தது. அத்துடன் பல தமிழர்கள் ஊடகங்களில் பேசும் போது சம்மந்தமற்ற இடத்திலெல்லாம் “அதாவது” என்ற பதத்தைப்பயன்னடுத்தும் போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. தமிழுக்காகப்போராடுகின்றோம் தமிழை பேசுவதில் கோட்டை விடுகின்றோம். அதற்றாக இலக்கணத்தில் அல்லது இலக்கியத்தில் பேசச்சொல்லவில்லை ஆங்கில உச்சரிப்பில் பேசினால் கூட அல்லது ஆங்கிலத்தையோ வேற்று மொழியையோ இணைத்துப் பேசினால் கூட பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைப்பயன்படுத்த கேட்கின்றேன். காரணம் இன்றுள்ள நிலையில் தமிழர்கள் அல்லாத பலர் தமிழை முறையோடு பேசக்கற்றுக்கொண்டிருக்கும் போது தமிழர்கள் தமிழை தவறாகப்பேசிக்கொள்வது முறையாகவா? காணப்படும். என்னிடம் பல இத்தாலியர்கள் தமிழ் கற்றுக்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் கற்கும் போது தமிழர்களிலும் பார்க்க அதிக விரைவாக கற்றுக்கொண்டார்கள் என்றால் நாளை அவர்களிடம் நாம் கற்கவேண்டிய அவல நிலை வந்து விடக்கூடாதல்லவா? உதாரணம் ஏற்கனவே வீரமா முனிவர் மூலம் வரலாறு விட்டுச்சென்ற சம்பவங்கள் உள்ளன .

– தொடரும்…….

Nessun commento:

Posta un commento