giovedì 5 agosto 2010

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

இந்த சாணக்கியமான வரிகள் முடிவிற்கு வரும் முன்னரே பலர் இதன் தலைப்பை வைத்து ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள்… அது தமிழர்களின் குணம்! எனவே, அதில் தப்பில்லை… பகுத்தறிவாளன் நிச்சயம் பகுத்தாய்ந்தே ஆவான். தமிழர்களில் அதிகமானோர் பகுத்தறிவாளர்களே ஆனால் அவர்கள் தம்மை இந்த அரசியலிலோ அல்லது போராட்டத்திலோ இருந்து ஒதுக்கிக்கொண்டதும், ஒதுக்கப்பட்டதுமான விளைவே இன்றைய தமிழீழத்தின் நிலை இவ்வாறு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைகள்.

இப்போது உட்செல்வோர் தொடரட்டும்…

நடந்து முடிந்தவற்றைச் சொல்லி மார்தட்டுவதிலும் பார்க்க, நடந்து முடிந்தவற்றைப்பற்றிய மீழ்பார்வையில் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளே தற்போது தமிழர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், நாடுகடந்த அரசினை மக்கள் மலைபோல் நம்பியிருந்தனர்… ஆனால் அதன் அறிக்கைகளும், செயற்பாடுகளின் ஸ்தம்பித்த நிலையும், செயற்பாடுகளை மேற்கொள்ளும் போக்கும் பலத்த சந்தேகங்களை எழுப்பத்தான் செய்கின்றது. இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று இன்றுவரை நாம் நினைத்திருந்தவர்கள் வெறும் பொம்மைகளே என்றும், எமக்காக செயற்படுவோர்கள் என்று கருதியவர்கள் அடிப்படைச் சூத்திரதாரிகள் என்பதும் மெல்ல, மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு நாடுகடந்த அரசு விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் அவ்வாறானவர்களை திடப்படுத்துவதாகவும், அவர்கள் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டிற்கு புலத்து ஊடகங்களும், திடீர் இணையங்களும் பெரும் ஆதரவளிப்பது “தேசியத் தலைவரின்” இத்தனை கால போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைகின்றது.

சரி ஆதாரத்தோடே உற்று நோக்குவோம். இரண்டு வருடங்களை அண்மிக்கப்போகும் முள்ளிவாய்க்கால் பேரவலம், ஆழிப்பேரவலத்திலும் பார்க்க மிக வேகமாகவே ஓய்ந்து போனது… போர்க்குற்றங்கள் தொடர்பாக புலத்து தமிழர்களின் ஆதங்கத்தை இலங்கை தமிழ் தலைமைகள் முறியடிப்பது தெரிந்தும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் கண்டனங்களும் அணுவளவேனும் நகர மறுக்கின்றது.

“தமிழ்வின்” போன்ற இணையங்கள் இப்போதெல்லாம் அதிகம் இலங்கை அரசியல் வாதிகளின் அல்லது இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற தமிழ் பிரமுகர்களைப்பற்றியே அதிகம் எமுதித்தள்ளுகின்றனர். இதன்மூலம் தேசியப்பற்றாளர்கள் மழுங்கடிக்கப்படுகின்றனர். ஆனால் தேசியத்திற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்த போது தெரியாத இளையோனை அவனிடம் கிடைக்கப்போகும் பல்லாயிரம் நிதிக்குப்பின்னர் கண்தெரிகின்ற அவலமும் இருக்கத்தான் செய்கின்றது.

நாடுகடந்த அரசினை ஆரம்பித்த கேபி தற்போது நாடுகடந்த அரசைப்பற்றிப்பேசாது அவ்வரசிற்கு முரணான செவயற்பாடுகளை மேற்கொள்வதும், பேச்சுக்களை வெளியிடுவது தெரிந்தும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் வாளாவிருப்பதும், கேபிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்ற விமர்சனங்களும், எதை வெளிக்காட்டுகின்றன… சிங்கள பிரதி அமைச்சரின் செயலை அனைத்து தமிழ் ஊடகங்களும் தூக்கிப்பிடித்து அதை ஒரு முன்பக்கச் செய்தியாக்க முனையும் போது இலங்கை அரசானது தனது சாணக்கியக்காய்களை தமிழர்களுக்கு எதிராக அதிக வேகமாக நகர்த்தி செய்கின்றதை நாடுகடந்த அரசின் அறிவாளிகள் எவ்வாறு கைக்கொண்டனர்??? தேசப்பற்றாளர்களின் ஒவ்வொரு அடிகளையும் நாடுகடந்த அரசின் பெயரில் மற்றும் ஒருசில அமைப்புக்களின் முனைப்பால் முறியடிப்பதனைப்பார்க்கும் போது, நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விழித்துக்கொள்ளாது இன்னமும் தூங்கிக் கொள்வது சாத்தியமா?

எமது புலத்து போராட்டங்கள் அனைத்தும் கேபியின் வாக்குமூலத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டதை இன்னமும் தமிழர்கள் உணரவில்லைப் போலும். இத்தனை காலமும் கருணாவை ஒரு பொருட்டாக மகிந்த தன்னருகே வைத்திருந்ததை இப்போதும் நாம்புரிந்து கொள்ளாவிடில், எம்மால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கேபி புலிகள் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் கொடுத்த வாக்கு மூலம் மற்றும் கருணா பிள்ளையான் போன்றோர் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்ததன் காலத்தின் நினைவுகள் எதனை தெளிவு படுத்துகின்றது???? இதன் பின்னர் போர்மீது போர்தொடுத்து தோல்வி கண்ட இலங்கை அரசு ஒரே பிடியில் புலிகளை முடக்கியதன் பின்னணி!!! இத்தனை காலமும் சர்வதேசத்திற்கு தண்ணிகாட்டி பிடிபடாத கேபி இப்போது மட்டும் எப்படி பிடிபட்டார் என்று யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லையே!!! இன்றுள்ள இந்த நிலைக்காக நாம் இழந்த தளபதிகளைச் சற்று எண்ணிப்பார்த்தாக வேண்டும்.

இன்றுவரை காத்திரமான ஒரு செயற்பாட்டை எங்கள் நாடுகடந்த அரசு வெளிக்காட்டவில்லை! ஆனால் இலங்கை அரசானது தனது போர்க்குற்றங்களை முறியடிப்பதற்கு புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளை வைத்தே சீர்செய்து வருகின்றது. அதே புலிகளின் பலிகளை வைத்தே போர்க்குற்றத்தை வெளிக்காட்ட நாம் முனைந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் அடிப்படைத்தவறு தமிழர்களின் ஒற்றுமையின்மை என்றே எல்லாரும் நினைத்து வருகின்றார்கள் ஆனால் அது வல்ல உண்மை!!! ஆரம்ப காலத்தில் புலிகளின் பலத்தை அளவுக்கு மீறி வெளிக்காட்டி சிங்கள அரசை பலமடையச் செய்தோம், இப்போது, தமிழர்களின் செயற்பாட்டை மழுங்கடித்து சிங்கள அரசை பிரபல்யப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அதுவே எமது இழப்பிற்குக்காரணம். ஒரே தளம், ஒரே தலைமை, இத்தனையும் அறிவும் ஆற்றலும் உடைய ஜனநாயகத்தால் கட்டப்பட வேண்டும். ஆழுக்கொரு அரசியல், ஆழுக்கொரு தலைமை, ஆழுக்கொரு கட்சி… ஆனால் கொள்கைமட்டும் ஒன்றாம்!!!

இலங்கை அரசு போரில் மட்டும் வெற்றி பெறவில்லை, தமிழர்களைப் போலியாக்குவதிலும் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றது. இலங்கை அரசு பயிற்சிகளையும் மண்டைச் சலவையினையும் முன்னாள் புலிகளுக்கு வழங்கி ஒரு பலத்த இறுக்கமான தமிழ்க் கட்டமைப்பை தனது ஆட்சிக்குள் உருவாக்கிவருகின்றது. ஆனால் தமிழர்கள் புலத்தில் செயலற்று, பயிற்சியற்ற செயற்பாடுகளால் இலங்கை அரசிற்கு தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச ரீதியில் பலத்த ஆதரவையே வழங்கி வருகின்றார்கள். ஓவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற மிகப்பலமான சந்தர்ப்பங்களை நாமே நாசமாக்கி வருகின்றோம். எமது ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் சிங்கள அரசை அதாவது மகிந்த அரசை முறியடிப்பதில் அக்கறை காட்டும் அளவிற்கு தமிழர்களின் இழப்புக்கள் மீதும், உரிமைகள் மீதும் அக்கறைகாட்டத்தவறியே வருகின்றனர். இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக வெளியிடும் தகவல்கள் ஒருபுறமும், தமிழர்கள் வெளியிடும் தகவல்கள் மறுபுறமாகவும் ஒன்றுக்கொன்று முரணானதாகக் காணப்படுகின்றமை கேலிக்கிடமாக உள்ளது.

கேபியிடம் நிதி மற்றும் கப்பல்கள் போன்ற சொத்துக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்ற போதிலும் கேபி அதற்கு முரணான பதிலைக்காட்டி தமிழர்களை கோமாளியாக்குவதனை என்னவென்பது? கருணாவின் சர்வதேச வாக்குமூலத்திலும் பார்க்க கேபியின் சர்வதேச வாக்குமூலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனை மகிந்த அறிவுபூர்வமாகத் தெரிந்த காரணத்தாலேயே கருணாவிற்கு பிரதி அமைச்சும் சர்வதேச குற்றவாளியாக்கப்பட்ட கேபிக்கு விடுதலையுடனான பாதுகாப்பும் வழங்கியிருக்கின்றது.

ஒரு வேளை கேபி பிடிபடாது இருந்தால் கருணாவிற்கு மீண்டும் அமைச்சுப்பதவியே கிடைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை அதை வைத்து அவர் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பது வேறு விடயம். சரி நாடு கடந்த அரசின் செயற்பாட்டிற்கு வருவோம், முன்னாள் எம்பியும் தற்போதைய நாடுகடந்த அரசின் அதிகாரியுமான ஜெயானந்த மூர்த்தி மற்றும் செயற்பாட்டாளர் ருத்திர குமார் போன்றோரின் தகவல்கள் அவ்வப்போது வெளிப்படுகின்ற போதிலும் மற்றோரின் மூச்சுக்காற்றுக்கூட தமிழர்களை வந்தடையவில்லையே?

மேலும் சில நாடுகளில் இன்னமும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் தெரிவு இடம் பெறவில்லையே? மேலும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களான தமிழீழ மக்கள் தமது சிக்கல்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக அவ்வமைப்பின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைத்தால்???? அதற்கான பதிலும் செயற்பாடுகளும்???? இதில் இருந்து விளங்கிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் நாடுகடந்த அரசு இலங்கை அரசிற்கு எதிராக செயற்படுவதிலும் பார்க்க தமிழர்களின் செயற்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்கின்றது என்பதே உண்மை என்ற எனது கருத்தினை இந்த நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விரைவில் முறியடித்துக்காட்டியே ஆகவேண்டும். கேபியின் இன்றைய போக்கு நாளைய தமிழர்களுக்கு எவ்வாறு வரலாற்றைக்காட்டப்போகின்றது என்பதனை அடுத்துவரும் பகுதிகளோடு இணைந்திருங்கள்… அன்பன் அருகன்

Nessun commento:

Posta un commento