giovedì 27 maggio 2010

தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

02bbn தமிழர்கள் தமது தேசியத்தை வென்றெடுக்க, அமைப்புக்களின் போக்கு மட்டுமல்ல தனி ஒருவரின் போராட்டமும் அவசியப்படுகின்றது… அருகன்

ஏற்கனவே இலங்கை அரசு வெளிவிவகார அமைச்சரைத் தெரிவு செய்தபோது, அதன் பிரதிபலிப்பு எவ்வாறு அமையும் என்பதனையும், அதன்தெரிவிற்கான காரணத்தையும் மேலோட்டமாக விபரித்திருந்தமை, பல இணையங்களில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஆதாரம்…  -  தற்போதைய வெளிவிவகார அமைச்சரும் ஈழத்தமிழர்களின் அரசியல் நகர்வும் [ புதன்கிழமை, 05 மே 2010, 03:37.38 PM GMT +05:30 ] ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்) என்று சொன்னதுமே, விடுதலைப்புலிகளின் சமாதானப் பேச்சுக்களே நினைவில் வரும். அத்தனைதூரம் புலிகளின் ஒவ்வெரு பேச்சுக்களிலும் அரசு சார்பில் தலைமைதாங்கியவராவார்.

இதில் புலிகளின் சார்பில் ஈடுபட்டோரில், (அமரர்) திரு அன்ரன் பாலசிங்கம் மற்றும் (அமரர்) சு.ப. தமிழ்ச்செல்வன் போன்றோர் தம்முடைய நிலையில் இனி வாய்பேச முடியாது என்பதனை நன்கு உணர்ந்த இலங்கை அரசானது, பேச்சுக்களில் ஈடுபட்ட இன்னும் இரு முக்கியஸ்தர்கள் என்ற வகையில் எதிர்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்படுகின்றமைக்கு, சர்வதேசத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று இருக்கின்றபோது,

உள்நாட்டில் மிஞ்சியுள்ள தற்போதைய பிரதி அமைச்சரும், சர்வதேசத்தின் பார்வைக்கு முன்னாள் புலிகளின் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவருமான கருணா என்கின்ற திரு.வி.முரளிதரன் அவர்களை ஒருவாறு தனது கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே கொணர்ந்த போதிலும், புலத்தில் மிஞ்சியுள்ள ஒருவராகவும் சட்டத்தரணியாகவும் காணப்படுவதோடு மட்டுமல்லாது, புலத்தில் தனது நிலையினைக் காலூன்ற, மக்களின் பலத்தினை அரணாகக்கொண்டு இன்று நாடுகடந்த அரசை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு வி.உருத்திரகுமார் அவர்களை ஒரு வழிபண்ணவேண்டும் என்ற புதிய புலத்தின் அரசியல் போர் உத்திகளுக்காக இலங்கை, அரசால் தெரிவாகியிருக்கும் ஒரு புத்திஜீவியும் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான “ஜீ. எல். பீரிஸ்” என்ற இந்த மனிதரை நியமித்துள்ளது.

உள்நாட்டில், பலம்பொருந்தி ஆயுத அரசியலில் 2009 வரை கால்பதித்திருந்த புலிகளை, அடியோடு அழித்துவிட்டோம் என்று ஆணவம் கொண்டிருந்த போதிலும், “புலம்பெயர்ந்த புலிகளாக” “புலிகள் பெயர்ந்து தமிழர்களாக” உருவாக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி மண்ணோடு மண்ணாக்குவது என்ற முனைப்பு ஒருபுறமிருக்க… சர்வதேசத்தால் தனது முன்னைய புலிகளுடனான அனுபவத்தை வைத்து காய்களை பக்குவமாக நகர்த்துவதற்காகவே இவர் இந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார் என்றே இன்னொருபுறம் எண்ணத்தோன்றுகின்றது.

புலத்தின், மற்றும் புலிகளின் கட்டமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் மனக்கசப்புகளும் இலங்கை அரசை மேலதிகமாக மூச்சுவிட வைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. கடந்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இந்த வருடம் ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருடத்தில், இலங்கை அரசானது பல சர்வதேச அரசியல், உள்நாட்டு ஜனநாயக நகர்வுகளை மேற்கொண்டிருந்த போதிலும், தமிழர்களின் சார்பில் கட்டப்பட்ட கட்டமைப்பை ஒரு முழுவடிவத்திற்கு கொண்டுவருவதில் ஏற்பட்ட தமிழர்களின் பின்னடைவு, இலங்கை அரசின் சர்வதேச அரசியலில் அவர்களை முன்னடைய வைத்துள்ளது.

(இதில் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது வேற்று நபர்களுக்கோ அமைப்புகளுக்கோ சார்பாகவோ, பாதகமாகவோ அன்றி,தமிழர்களுக்கான ஒரு பலமிக்க கட்டமைப்பு, மற்றும் ஒரு பலமிக்க, நம்பகத்தனமான தலைமைத்துவம் அவசியம் என்பதனை இத்தால் வலியுறுத்துகின்றேன். அந்தத்தலைமைத்துவம் இன்னாராகத்தான் (xxx) இருக்கவேண்டும் என்று புலிகளின் ஆதரவாளர்கள் சொல்வது போலன்றி, யாராகவும் இருக்கலாம் என்பதே எனது ஆணித்தனமான கருத்தாகவும் உள்ளது...)

புலத்தில் இவ்வாறான தமிழர் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோர், இலங்கைத் தேசியத்தை ஏலவே மாற்றி பிறிதொரு தேசியத்தில் இருப்பதால், அவர்களுக்கெதிராக எந்த நடவடிக்கையினையும் இலகுவில் எடுக்கமுடியாது போய்விட்டது. இருந்தபோதிலும் சர்வதேசத்தின் அனுசரணையுடன் இந்த முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள சந்தர்ப்பங்கள் தேடப்படுவதென்பெது உண்மையே!

இப்போது இலங்கை அரசின் பார்வையானது, அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகடந்த கட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதாவது உள் மற்றும் வெளிச்செயற்பாட்டில் இருந்தே, இலங்கை அரசின் இதற்கெதிரான சட்டப்போக்குகளில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த நாடுகடந்த கட்டமைப்பபானது, புலிகளின் போக்கினை வளர்த்தெடுப்பதாகவோ, அல்லது புலத்தில் இருந்து நிதிகளை வசூலிப்பதில் சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொண்டாலோ, இலங்கை அரசிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய நடவடிக்கையாக காணப்பட்டாலோ அன்றி இந்த நாடுகடந்த அரசை இலங்கை அரசு எதிர்க்கப்போவதில்லை.

அவ்வாறான செயற்பாட்டை உற்று நோக்கிய இந்த அமைச்சர் “பீரீஸை” பொறுப்பாக அமர்த்தியதற்கான காரணம் இப்போது மக்களுக்கு தெளிவாக விளங்கியிருக்கும். ஏற்கனவே அரசின் சார்பில் அணுவளவும் குறைவுபடாத பாலிதவை வைக்கவேண்டிய இடத்தில் ஏற்கனவே வைத்துள்ளமை சற்று அரசியல் வாதிகளை சிந்திக்கவைத்திருக்கும். அத்துடன் பான் கீ மூன் தொடர்பாக எதுவும் நான் செல்லவேண்டியது இல்லை, காரணம் அவர் யார், எந்த நாட்டையுடையவர், அந்த நாட்டிற்கும் இலங்கைக்கும் உள்ள மத மற்றும் நிதி, ஒப்பந்தங்கள் தொடர்பாக உள்ள ஈடுபாடுகள் அப்பப்பா!!!...

இவ்வாறு இருக்க, ஜீ. எல். பீரிஸ் (காமினி லக்ஷ்மன் பீரிஸ்)  இலங்கையில் ஒரு பேராசிரியரும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதியும் ஆவார். ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப்பேச்சுக்களில் அரசதரப்பின் தலைவராக இவர் இருந்ததோடு, மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு கட்ட அரசவையிலும் பலமிக்க அதிகாரமுடைய அமைச்சினைக் கையாண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தற்போது அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் அதிகாரிகள், மிகத்திறனுள்ள ஒரு அரசியல் சாணக்கியமுள்ள இலங்கை அரச தலைவரை எதிர்த்தே எமது போராட்டம் தொடங்கப்போகின்றது என்பதனை நன்கு நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால், முன்னைய பாராளுமன்ற அனுபவமுள்ள ஒருவரையும் இந்தக்கட்டமைப்பு உள்வாங்கியிருப்பதென்பது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகக்கொண்டாலும், இன்னும் சில சந்தேகங்கள் எழாமல் இல்லை இந்த சந்தேகங்கள் உண்மையாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப்பகுதியில் அவை இணைக்கப்படப்போவதில்லை.

அத்தோடு, இத்தனை காலமும் இருந்த வெளிநாட்டு அமைச்சர்களிலும் பார்க்க தற்போதுள்ள ஜீ.எல்.பீரிஸ் அவர்களை சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் துணுக்கு எழுதப்படுகின்றது. இதனை, அமைக்கவிருக்கும் நாடுகடந்த அரசின் நடத்துனர்களும் அமைப்பாளர்களும் அறிந்து மிகப்பக்குவமாக காய்களை நகர்த்தும்படி அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

மேலும் , கடந்த தேர்தல்களில் (புலத்தில்) இடம்பெற்ற ஜனநாயகப்போக்கு வரவேற்கத்தக்கதாக இருந்த போதிலும், சர்வதேச கணிப்பீட்டின்படி மக்கள் தொகையில் வாக்களித்தவர்களின் தொகையினை சர்வதேசக்கணிப்பாளர்கள் குறை கண்டுபிடிக்காதளவிற்கு அமைப்பதில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டப்படுகின்றீர்கள்.

இலங்கை அரசின் மெளனத்தை அச்சமென்றோ, இயலாத்தன்மை என்றோ, அல்லது தமிழர்களின் போக்குச்சிறந்தது என்ற அடிப்படையிலோ, முட்டாள்தனமாக எனது எழுத்துக்கள் பாராட்டிய கருத்துக்களாக இருக்காது, எப்படி ஆரம்பத்தில் புலிகளின் நகர்வை அறியமுடியாது இலங்கை அரசு திண்டாடியதோ, அதுபோலவே இன்றுள்ள இலங்கை அரசின்போக்கு என்பதனை எச்சரிக்கையோடு, அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்துமாறு தமிழ்த்தலைவர்களை விழித்துக்கொள்ளச் சொல்கின்றேன்.

தற்போது மேய்ப்பனில்லாத ஆடுகளாக இருக்கும் தமிழர்களுக்கு ஒரே ஒரு தொடர்புச்சாதனமாக அமைந்திருப்பது இணையங்களே.அந்த இணையங்களின் சாதுரியமான கருத்துக்களை வைத்தே தமிழர்கள் சர்வதேச சாணக்கியத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவும், இலங்கை அரசின் சாணக்கியத்தை முறியடிக்கவும் வேண்டும்.

உண்மையில் இலங்கை அரசு புலிகளை முடக்கிவிட்ட வீராப்பில் தூங்கிக் கொண்டாலும், அதை நாம் தூக்கமாகக் கருதக்கூடாது, அது தூங்குவதுபோல் நடிப்பதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆமை வேகத்தில் நாம் சென்றாலும், முயல் வேகத்தில் செல்லும் இலங்கை அரசை தமிழர்கள் சார்பால் இந்த நாடுகடந்த அரசு வெல்லவேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு சார்பில் மேற்கொண்ட பத்திரிகை மாநாடுகளில் அமைச்சர்கள் வெளியிட்ட கருத்தாவது, புலிகளும் நாடுகடந்த அரசும் ஒன்றே என்ற பாணியை கொணர முயற்சிப்பதில் இருந்து அரசு வேறுவழியில் இந்த நாடுகடந்த அரசிற்கெதிரான தனது காய்களை நகர்த்திவருகின்றது என்பது வெளிச்சம். அத்துடன், அமைச்சர் பிரிசால் வழங்கப்படுகின்ற கட்டளைகளை இலங்கைத் தூதராலயங்கள் உலகின் பல பாகங்களிலும் திடமாக மேற்கொள்வதோடு, உலக அரசுகளும் தமது நகர்வுகளை இவருடைய அழுத்தத்திலிருந்தே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்நபர் மிகவும் முக்கிய காயாக தமிழர்களுக்கு விளங்கப் போகின்றார். இதனை எதிர்கொள்ள நாடுகடந்த அரசு அவையைப் பலப்படுத்துவதிலும், பெருமைகொள்வதிலும் பார்க்க இதற்கு “முறியடிப்பு” முகங்கொடுப்பதில் அக்கறை அதிகம் செலுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

தமிழர்களின் பலம்பொருந்திய சிறந்த,அழிக்க முடியாத சர்வதேச கட்டமைப்பை எதிர்பார்த்து… ) நேற்றைய தினம் (24/05/2010) புலத்தில் இயங்கிவரும் ஜீ.ரீ.வி.யைப்பார்த்தபோது அதில் இதுதொடர்பாக ஒரு நிகழ்ச்சியினை நடத்தினார்கள். அதில் குறிப்பிடப்பட வேண்டிய பலமுக்கிய விடயத்தை இரத்தினச்சுருக்கமாக முன்பே குறிப்பிட்டு விட்டபோதிலும் காலந்தாழ்த்தியே தமிழர்களின் அடிகள் எடுத்துவைக்கப்படுகின்றமை எமது பின்னடைவையே காட்டுகின்றது.

இலங்கை அரசின் ஒவ்வொரு அணு அணுவான அசைவுகளையும் தமிழர்கள் உன்னிப்பாகக்கவனிக்க வேண்டிய நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளோம். தமிழ்  இணையங்களையும், தமிழ் ஊடகங்களையும் தொடர்ச்சியாகப்பார்த்தும் நம்பியும் வருகின்ற எமக்கு சர்வதேசத்திலும் ஊடறுத்துச் செல்லக்கூடிய பொறுப்புகளை உடைய சிங்கள அரசின் அணுகு முறைகளை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது?.

புலிகள் தேசியத்தின் ஏக பிரதிநிதிகள் என்று நாம் அவர்களிடம் பொறுப்புக்களை விட்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தோம்!!! அது முற்றாக சிதைவடையும் மட்டும் எமது உறக்கம் கலையவில்லை!!! பின்னர் கூட்டமைப்பிடம் எமது நம்பிக்கையினை வைத்துவிட்டு மீண்டும் உறங்கச் சென்றோம்… இப்போது நாடுகடந்த அரசு என்ற மாபெரும் சரித்திரத்தில் சர்வதேச அளவில் இருக்கின்ற போதில் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று மக்களோ (தமிழர்களோ) எல்லாவற்றையும் நாம் பார்த்துவிடுவோம் என்று (நாடுகடந்த அரசு ) அமைப்பாளர்களோ நினைத்துவிடக்கூடாது!!! இங்கேதான் எனது உறுதியான கருத்தைத்தெரிவிக்க முனைகின்றேன்… ஒவ்வொரு தமிழர்களும் தமது பங்களிப்பு வாக்குப்போடுவது என்றோ, நிதி உதவி வழங்குவது என்றோ நின்றுவிடக்கூடாது!!! அதையுந்தாண்டி பல விடயங்களை நாம் கால் வைக்கவேண்டும்.

நாடுகடந்த அரசை 18ம் திகதி அமைக்கவேண்டும் என்று உறுதி கொண்ட அமைப்பாளர்களுக்கு அதனை ஆணித்தனமாக நடாத்துவதற்கு அடியில் இருந்து நுனிவரை இழுபாடாகத்தான் இருக்கின்றது. அந்த இழுபாட்டில் பிஞ்சுபோவது தமிழர்களேயன்றி வேறுயாருமல்ல! 17,18ம் திகதி நடத்தியாகவேண்டும் என்ற வைராக்கியம் முக்கியமா? தமிழர்களுக்கு நிரந்தர விடிவு அவசியமா? ... இதில் அமைப்பாளர்களுக்கு 18ம் திகதி பிடிவாதமே அவசியப்பட்டது. அதனால்தான் சில நாடுகளில் தேர்தல் நடைபெறாமலே அவையைக்கூட்டிவிட்டார்கள்... ம்... ம்... சரி மீண்டும் தூங்கச்செல்வோம்...

முதலில் நாடுகடந்த அரசின் தற்போதைய பின்னடைவுகளுக்கு, அவர்களுடைய முயற்சி ஒரு காரணமல்ல, சாதாரண அமைப்பை நடத்துவதற்கே அதிகமான நிதிகளும், ஆர்வமான செயற்பாடுகளும் தேவைப்படும் போது, ஒரு நாட்டையே ஆட்சி செய்வதற்கு வெறும் வாக்குகளை மட்டும் போட்டால் போதுமா? நிதிகளுக்கும் ஆதரவிற்கும் எங்கு போவது??? இதற்கு நிதியை சட்டபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன அதில் எந்த வழிகளிலும் இலங்கை அரசு எதிர் நடவடிக்கைகளை எடுக்காத வகையில் மேற்கொள்ள வழிகள் இருக்கின்றன. இதற்கு மக்கள் ஒவ்வொரு தனி மனிதர்களாகவும் போராட்டத்தில் குதிக்க வேண்டும் (கவனம் தமிழர்களே!!!).

இந்த வகையில் நாடுகடந்த அமைப்பாளர்களின் அடுத்த கட்டநடவடிக்கை நிதி சேகரிப்பாகவே அமையப்போகின்றது. அது வரைக்கும் அவர்கள் எந்த அறிக்கையோ அல்லது எந்த நடவடிக்கையோ எடுக்கப்போவதில்லை!!! இலங்கை அரசிற்கு வரி வசூலிப்பதற்கு உரிமை இருக்கின்றது... ஆனால் இந்த நாடுகடந்த அரசிற்கு...????

இலங்கை அரசு போர்க்குற்றத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று இப்போது ஆதாரத்தோடு நிரூபித்தாலும் அதன் போக்கு பற்றி இந்த போர் இடம்பெற்ற போதே ஆணித்தனமாக விபரித்திருந்தேன் என்பதனை எனது இணையத்தின் வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே, இன்று இலங்கை அரசு எடுதஇதுவைக்கும் ஒவ்வொரு அடிகளிற்கும் பத்தடி வேகமாக ஒவ்வொரு தமிழர்களும் காய்களை நகர்த்தவேண்டும்.
கடந்த காலத்தில் எமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததில் இருந்து எமது போக்கானது இலங்கை அரசை கூண்டில் ஏத்தவேண்டும் என்ற பிடிவாதத்தில் நிற்கின்றோமே ஒழிய தலைவரின் எண்ணத்திலிருந்து பின்நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதனை மறந்து விட்டோம். சிங்களவர்களை அழிப்பதோ, அல்லது இலங்கை அரசை இல்லாது ஒழிப்பதோ தலைவருக்கு ஒரு பெரும் காரியம் இல்லை என்பதனை கடந்த காலத்தில் பலத்த பாதுகாப்பிலும் தலைநகரில் விமானத்தாக்குதலை நடாத்திக்காட்டியதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதாபிமானம், சர்வதேசம், போர்நீதி போன்ற பல்வேறு காரியத்தோடும், இலங்கை அரசிடம் இருந்து நீதியான உரிமைகள் வேண்டுவதற்காகவும் பொறுமையினை கடைப்பிடித்தாரே ஒழிய எந்த சிங்கள இனத்தவரையும் வெறுத்ததோ அல்லது எதிரியாக நினைத்ததோ இல்லை! சிங்கள இன வெறியர்களின் போக்கையே கண்டித்து இப்போர் பலமாக நடைபெற்றது என்றால் அது மிகையல்ல!

இன்று தமிழர்களின் ஒவ்வொரு அடிகளின் படிகளிலேயே தமிழீழம் கட்டப்படுகின்ற அத்திவாரம் உண்டென்பதனை அடுத்து வரும் பகுதிகள் மேலும் தெளிவு படுத்தம்.

இதில் ஒரு சாணக்கியத்தைச் சொல்லியே ஆக வேண்டும்... புலிகளை அழித்தது போல் நாடுகடந்த அரசை அழிப்பதற்கு இலங்கை அரசு வண்முறையினைக் கையாளப்போவதில்லை! அதனை சர்வதேசத்தை வைத்தே அழுத்தங்கொடுக்கப்போகின்றது என்பதே அசைக்க முடியாத எனது எண்ணம்... – அருகன்.    (25/05/2010)

Nessun commento:

Posta un commento