sabato 7 maggio 2011

தாயை இழந்த எத்தனையோ செல்வங்கள் எமது தேசத்தில் இன்று… அவர்களுக்கு யார் தாய்??? – Arugan

100_3819

ஈழம் என்ற சொல்தொடர்பாகவும் அது காலம்காலமாய் எம் தேசத்தை குறித்த சொல் என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கனவே பல ஆக்கங்களிலும் நாவலிலும் தெரிவித்திருந்தேன். அதை இப்போது மீட்டுவது அவசியப்படுகின்றது.

 

அதாவது ஈழம் என்ற பதம் இலங்கை குறிக்கின்ற சொல்…! வரலாறாக எடுத்தாலும் சரி, புராணமாக எடுத்தாலும் சரி, இராவணன் தொடர்பாக சில தகவல்களை எடுத்துப்பார்க்க வேண்டும். இராவணனின் காலம் சிங்களவனான விஜயனின் வருகையிலும் பல வருடங்களுக்கு முன்னாக இருக்கின்றபோது, இலங்கை வேந்தன் என்றும் ஈழவேந்தன் என்றும் இராவணனை வர்ணித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களை எனது 2003ம் வெளியீட்டின் “அநுபூதி” நாவலில் உள்ள “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதி போதிய ஆதாரங்ஆகளையும் விளக்கத்தையும் தரும் என்று நம்புகின்றேன். இது இப்படிஇருக்க, தனித் தமிழீழமே தமிழர்களுக்கு ஒரு தீர்வென்று முதலில் கங்கணம் கட்டியவர் மேன் மதிப்பிற்குரிய தந்தை செல்வநாயகம் அவர்களே!

நல்ல நியாயம். இத்தனை காலமும் வெளிவராத தந்தை செல்வாவை இப்போது வட்டுக்கோட்டை என்ற பாடையில் போட்டுப் பல்லாக்குத்தூக்கிவருகின்றனர் … எனவே தமிழீழ வித்தின் தெய்வம் தந்தை செல்வநாயகம் அவர்களே!!!! தமிழீழத்தின் கனவு…

இந்தத்தமிழீழக்கனவிற்குச் சொந்தக்காரர் தந்தை செல்வாவே!!!!

ஏற்கனவே குறிப்பிட்டது போல் நாடுகடந்த தமிழீழத்தின் அங்கத்தவர்கள் தொடர்பாக, பல்வேறு நபர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் புலிகள் ஆதரவாளர்கள் என்பது கேள்விக்குறியே! இது இப்படிஇருக்க நாடுகடந்த தமிழீழத்தை இலங்கை அரசு பெரும் நிதியைச் செலவளித்தோ அல்லது சூழ்ச்சியாலோ குழப்பவேண்டும் என்ற அவசியம் இருக்காது.

ஆரம்பத்தில் தமிழீழப்போராட்டத்திற்கென முப்திற்கும் அதிகமான போராட்டக் குழுக்கள் (பலமானதும், சிறப்பானதும்) இருந்தனவே! அவைகளில் யாரும் தமிழீழத்திற்கு எதிராக புறப்படவில்லை. தலைமைக்கு எதிராகவே புறப்பட்டனர். அது அணுவைப்போல் பிரிந்து பிரிந்து இல்லை … இல்லை… பிரித்துப்பிரித்து சிங்களவனுடைய பலத்தை அதிகரித்துவிட்டது.

இப்போது நடைமுறையில் உள்ள செய்திகளுக்குத் திரும்பிப்பார்த்தால், இலங்கை அரசிற்கு புலிகளுக்கு எதிரான  பலத்த ஆதாரத்தை புலிகளே ஏற்படுத்திச் சென்றுள்ளார்கள். 

18ம் திகதியை போர்க்குற்றவியல் நாளாக அனுசரிக்கும்படி சில தலைமைத்துவங்கள் அழுத்தங்கொடுக்கின்றன. பல மாதங்களாக போர்நடந்த போது அந்த 18 மட்டும் இந்த (தலைவரின் ) நாளாக அனுசரிக்க வேண்டுவது சந்தேகத்தை உறுதிப்படுத்தவில்லையா?

எமது போராட்டம் தாய்மண்ணுக்காகவென்றால் அந்த தாய் மண்ணில் வாழ்வதற்கு மனுக்குலம் தேவையில்லையா?…

மனுக்குலத்தின் அழிவில் ஒரு தேசம் வேண்டும் என்று வாதாடுவதற்கு நாம் பலலட்சம் பேர்களைக் கொண்ட இனமல்ல … இழப்புகளை சந்திப்பதற்கு… “இரத்தம் சிந்தாமல் சமாதானம்” அதுவே எமது குறிக்கோளாக இருக்கவேண்டும். இலங்கை அரசிற்கு எதிராக குரல்கொடுத்தவர்கள் இன்று அதே அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள். அந்த உறுப்பினர்களில் யாராவது உண்ணாவிரதம் இருக்கலாமே,

அந்த உறுப்பினர்களில் யாராவது பதவி துறக்கலாமே!

அந்த உறுப்பினர்களில் யாராவது எமது பிணக்குத் தொடர்பாக ஐ.நா. சபைக்கு  விண்ணப்பிக்கலாமே, அல்லது சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தலாமே!!!

அதற்காகத்தானே மக்கள் அவர்களைத் தெரிவு செய்துள்ளனர். இல்லை தேசத்தின் அபிவிருத்திக்காக மக்களின் நன்மைக்காக என்றால் அதைத்தானே டக்ளஸ் இத்தனை நாழும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்பதற்கு கடந்த ஜனநாயக தேர்தல் ஆதாரம் காட்டுகின்றது.

அது கள்ளவோட் அந்தவோட் என்று சொன்னால் … நாடுகடந்த தேர்தல் முடிவுகள் இன்னமும் தெளிவு படுத்தாத நிலைக்குக்காரணம் தெரியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

அதைத்து தமிழ் மக்களும் தற்போது சற்று இளைப்பாற வேண்டும்.  அதற்காக ஒரு பகுதி பின்னே வருகின்றது. கொஞ்சம் மனதை சாந்திப்படுத்துங்கள் …

வெந்த எம்உறவுகளின் அகோர தாண்டவத்தை பொறுக்காமலே எமது ஆணித்தனமான விமர்சனங்களும் ஆணித்தனமான ஆக்கங்களும் வெளிப்படுகின்றன…

எனவே சற்று எமது எண்ணத்தை தாழ்அலைக்குக்கொண்டுசெல்வோமா?!!!!

தாயின் மடியில் தலைவைத்திருந்தால், துயரம் தெரிவதில்லை … தாயை இழந்த எத்தனையோ செல்வங்கள் எமது தேசத்தில் இன்று… அவர்களுக்கு யார் தாய்???

எங்கும் நிறைந்துள்ளவன் தேவன் என்று வேதங்கள் சொல்கின்றது.
இந்த வேதங்களையே தாயாகக்கருதுகிறது இத்தரணி.
காரணம்,
ஆண்டவனிடம் இல்லாத நிம்மதி அன்னையிடம்  கிடைக்கும் என்ற அற்ப ஆசை போலும்!
உண்மைதான்!
ஆயிரஞ் சுமைகள் கனக்கும் போது அவள் மடிதான் எத்தனை அமைதிதருகிறது.
அத்தகைய சுகம் ஆண்டவனுக்குக்கூட கிடைத்திருக்குமா? என்ற ஐயப்பாடு எனக்கு எழுகிறது.
ஒருமுறை என்னால் எழுதப்பட்ட வரிகள் எனக்குக் கைகொடுக்கிறது.

“ஒரு ஆடவன்
அன்னைமடியிலும்
கன்னிமடியிலும்
மழலையாகின்றான்.”

மட்டுமல்ல கண்ணீர் கூட வடிக்கின்றான். . . அதில் சுகமடைகிறான்!

பல அனர்த்தத்தைப்பார்த்து என்னுள்ளம் கண்ணாடி மாளிகையில் கல்பட்டது போல் ஆனது!

அவற்றில் அன்னையில்லாத பிள்ளையின் நிலையும் ஒன்று.

இந்த நிலை இப்படி இருக்க ஒருசில பிள்ளைகள் அன்னை இருந்தும் அந்த சுகத்தை அனுபவிக்காத அபாக்கிய நிலையையும் பார்த்ததுண்டு.

மன்னன் திரைப்படம் வந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் அந்தப்பாடல் கேட்பதற்கு ஒரு வித சுகம் இருக்கத்தான் செய்கிறது.

“அம்மா என்று அழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே.

நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது.”

இங்கு இசையோ அல்லது, இலக்கிய வசனமோ, ஏதோ ஒன்று ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் ஊடுருவத்தான் செய்கிறது.

ஒரு பெண் தாயாகும் போது அவள் பூரிப்படைகிறாள்

ஒரு மழலை பூமியைத்தொடும் போது  அவளைச் சூழ்ந்தோரும் சாந்தமடைகிறார்.

ஆனால், அவளும் மீண்டும் ஒருமுறை பிறந்துதான் வருகிறாள் என்பதனை யாவரும் அந்த வேளையில் மறந்து விடுகின்றோம்.

அவள் தன் வேதனைகளை, தவப்புதல்வுக்காகத் தானஞ் செய்கிறாள்.

ஆண்களின் பருவமாற்றங்களிலும் பார்க்க, பெண்களின் பருவ மாற்றங்கள் யாவும் வேதனைக்குரியன:
அவள் கன்னியாகுங் காலத்தில் கலங்குகிறாள். அதன் பின் கண்ணீர் வடிக்கின்றாள். மனைவியாகும் போது மாய்கிறாள். தாயாவதற்குள் துடிக்கிறாள். தாயானபின் தவிக்கிறாள்.

“தாய் என்கின்ற ஸ்தானம் மட்டும் இல்லையென்றால் தரணியில் இப்பெண்ணெல்லாம் கணனிப் பொறிதான்.”

ஆடவனின் ஆதிக்க வெறி அடங்கிப் போவது அன்னையின் அன்பில் மட்டுந்தான் நிரந்தரம்.

உலகமகா சர்வ அதிகாரிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிட்லருடைய வரலாற்றைப்புரட்டினால், அவன் தாய்மீது வைத்துள்ள பாசம் புலப்படும். ஒருவேளை, அவனுடைய தாய் அக்காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் இரண்டாம் உலகமகாயுத்தம் இந்த உலகவரலாற்றில் இடம்பெறாமல்க்கூடப் போய்யிருக்கும் என்பது எனது எண்ணம்.

அவன் பிறக்கும் போது அவனை அணைத்துக்கொண்டவளை, இவன் இறக்கும் போது அவள் புகைப்படத்தை அணைத்துக்கொண்டே உலகைப் பிரிந்தானென்றால் தாய்ப்பாசம் அவனை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும் என்று  சற்று எண்ணிப்பாருங்கள்.  

ஒரு கன்னி அன்னையாகும் மட்டும் அவள் கற்பனை கணவனைச் சுற்றுகிறது. பின் கற்பனையே அவளைச்சுற்றுகிறது. 

ஒரு விதத்தில் ஆதிப் பெற்றோரின் பாவத்தை வரவேற்கத் தோன்றுகிறது. அதனால்தான், தாயின் சுகம் எமக்குக் கிடைத்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை”

உள்ளச் சுமைகள், சுகங்களைக் குறைக்கும் போது சுகந்தருவது தாயின் மடியல்லவா?
அத்தகைய சுகத்தை எத்தகைய சொற்கம் சொந்தமாகக் கொண்டுள்ளதோ தெரியவில்லை!

மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் அன்னையின் அன்பில் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

கோழி தன்குஞ்சுகளை கூட்டிச் சேர்க்கும் போதும், குஞ்சுகள் அஞ்சி அஞ்சி அன்னையின் சிறகுக்குள் தஞ்சமடையும் காட்சியும் தாங்கமுடியாத தாய்ப்பாசத்தை தெளிவுபடுத்தும்.

மனுநீதிக்காகச்சொல்லப்பட்ட கதை ஒன்று, அது எனக்கு தாய்ப்பாசத்தின் பிரதிபலிப்பைக் கண்கலங்கச் செய்தது.

“அம்புனிற் றாவின் கன்றோர் அபயத்தின் ஊடு போகிச்
செம்பொன்னின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்படே
உம்பரின் அடையக் கண்டங் குதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந்நடுக் குற்று வீழும்”

இலக்கிய  நயம் கொண்ட இந்தப்பாடல் என் இதயத்தை ஊடுருவிச் சென்றது. “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்பார்கள் இந்தப் பெத்த மனசை இந்தப் பசுவில் சுவைத்துப் பார்த்தேன்.

அனபாயச் சோழனின் மனுநீதியைக்காட்டும்  அற்புதமான பாடலில் இந்த வரிகள் களையப்பட்டாலும் அதன் கருத்து என்னை எங்கோ கொண்டு சென்றது.

அப்பாடலை விரிவு படுத்திப்பார்த்தால்:

“அழகிய பசுவின் கன்றுக்குட்டிஒன்று வேகமாகச்செல்லும் அரசனின் தேர்க்காலில் எதிர்பாராமல் மிதிபட்டு ஆபத்தில் சிக்கி இறந்து விண்ணுலகம் அடையக்கண்ட தாய்ப்பசு, நெஞ்சுபதைத்து அங்கும் இங்கும் ஓடி, துன்பந்தாங்காமல் வெம்பியது, சோகப்பெருக்கால் அழுது சோர்வடைந்தது வேதனையால் உடல் நடுக்கமடைந்து சோர்ந்து விழுந்தது” 

இப்படிச்செல்லும் அந்தப்பாடலில், இந்த வரிகள் ஒரு அன்னையின் அன்பினையும், பாசத்தினையும் மகப்பிரிவாற்றாமையும், அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, எந்த உயிரினத்தை எடுத்தாலும் அந்த உயிரினம் அன்னையின் பாசத்திலே அடித்தளம் கட்டப்படுகிறது.

கதைக்குமட்டுமல்ல தாயிடம் பால் வேண்டி பசியால் ஓடிவரும் கன்றுக்குட்டியை மம்ம்;மா… என்றழைத்து அமுதூட்டும் அந்தக்காட்சி அற்புதமானது.

“மானிடருக்குக் கற்றுத்தரவேண்டிய ஏராளமான மதிநுட்பங்களை மிருகங்களும், பறவைகளும், இயற்கையுமே புரியவைக்கிறது.” 

இது, இயற்கையின் செயற்பாடே ஒழிய செயற்கையில் உருவாவதில்லை.

அதனால்தான், மற்றைய உறவுகளில் இருந்து தாயின் உறவுக்குமட்டும் பாசம் என்கின்ற வார்த்தை பாவிக்கப்படுகிறது.

எனினும் இப்போது பலர் பாசம், அன்பு, காதல், விருப்பம், என்பவற்றிற்கான வேறுபாடுகளைக் கையாள்வதில்லை.

மற்றைய உறவுகள் பிரிக்கப்படும், மாறுபடும் ஆனால் தாயின் உறவு பிரிக்கப்படுவதுமில்லை , மாறுபடுவதுமில்லை

அன்னையே அன்றாடம் அகிலத்தில் பூஜிக்கப்பட வேண்டியவள்.
அவள் அன்பினை யாசிக்க வேண்டிய அற்ப பூக்களே நாம்.
புலம் பெயர் தேசத்தில் ஒரு புலம்பல் இப்படிக்கேட்கிறது…

ஆ. ஆ. . . ஆ. . . .
அம்மா உந்தன் பிள்ளை தான் – உன்
அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்

தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
தேசம் விட்டு தேசம் வந்து வேதனையில் வாடுது பார்
வேதனையில் நானிருக்க ஆறதலாய் யார் வருவார்
இன்பமும் துன்பமும் உன் பெயர் சொல்லுதம்மா

சிட்டுச் சிட்டுக் குருவிக்கெல்லாம்
தாய்ப் பாசம் புரிஞ்சிருக்கு
சிந்தையுள்ள மனிதருக்கு பாசம் புரியவில்ல
விக்கி விக்கி அழுதாலும் வேதனைகள் தீரவில்ல
தாய் மடியைப் போல ஒரு தாகம்தான் தீரவில்ல

ஆண்டவனுக்குச் சோகம் இல்லை அதனால தாயும் இல்ல
தாயே உந்தன் சேயைப் போல சோகம் யாருங் கண்டதில்லை

அம்மா உந்தன் பிள்ளை தான் – உன்
அன்பிற்கு ஏங்கும் முல்லை நான்
தரணி அழிந்தாலும் தாய்ப்பாசம் மட்டும் அழியப்போவதேயில்லை, அதற்காக ஏங்கும் தனையனின் ஆதங்கமும் ஓயப்போவதேயில்லை… … !!!
இப்போது, தாயின் மடியில் தூங்குவதுபோல் சற்றேனும் அமைதிப்பெருமூச்சை விடுங்கள்… அடுத்தபகுதியில் மேலும் பல பக்குவங்களுடன்… அன்பன் அருகன்.

Nessun commento:

Posta un commento